/
வாராவாரம்
/
சித்ரா... மித்ரா ( கோவை)
/
போட்ட காசை எடுக்க ஆபீசர் கேக்குறாரு லஞ்சம்
/
போட்ட காசை எடுக்க ஆபீசர் கேக்குறாரு லஞ்சம்
ADDED : ஆக 04, 2025 10:58 PM

செ ல்வபுரம் செல்வசிந்தாமணி குளக்கரையில், 'வாக்கிங்' செல்ல சித்ராவும், மித்ராவும் வந்திருந்தனர்.
ஸ்கூட்டரை ஓரங்கட்டி நிறுத்தி விட்டு, பேசிக் கொண்டே நடக்க ஆரம்பித்த மித்ரா, ''முன்னாள் அமைச்சர் வேலுமணி, த.வெ.க., தெற்கு மாவட்ட நிர்வாகி வீட்டுக்கு போயிருந்தாராமே... ஏதாச்சும் சூட்சுமம் இருக்கா... அரசியல் வட்டாரத்தில், 'ஹாட் டாபிக்'கா பேசிட்டு இருக்காங்களே...'' என, கொக்கி போட்டாள்.
''அதுவா... அவரோட அப்பா கொஞ்ச நாளைக்கு முன்னாடி இறந்துட்டார். துக்கம் விசாரிக்கிறதுக்கு 'மாஜி' போயிருக்காரு. இதை எதிர்க்கட்சிக்காரங்க உன்னிப்பா விசாரிச்சிருக்காங்க. விஜய் கட்சி கூட்டணிக்கு வராட்டினாலும், நம்மூர்ல மட்டும் அந்தக் கட்சிக்காரங்கள கட்டுப்பாட்டுக்குள்ள வச்சிக்கிடலாம்னு, 'ஸ்கெட்ச்' போட்டு, காய் நகர்த்துறாங்களோன்னு சந்தேகம் வந்திருக்கு.
உளவுத்துறை மூலமா 'என்கொயரி' செஞ்சப்போ, த.வெ.க., நிர்வாகியின் சகோதரர், அ.தி.மு.க., பகுதி கழக செயலாளரா இருக்காராம்; அந்த உறவுல வீட்டுக்குப் போயி, துக்கம் விசாரிச்சதா ரத்தத்தின் ரத்தங்கள் சொல்றாங்க,''
ஆளுங்கட்சியின் பயம் ''இருந்தாலும், இது வேறொரு 'தேர்தல் கணக்கு' மாதிரி தெரியுதுக்கா,'' என்ற மித்ரா, ''உங்களுடன் ஸ்டாலின் முகாமுக்கு போயிருந்தீங்களே... எப்படி நடக்குது...'' என, கேட்டாள்.
''ஒன்றிரண்டு பெட்டிஷனுக்கு, உடனடியா ஆர்டர் கொடுக்க ஏற்பாடு செய்றாங்க. உரிமைத்தொகை கேட்டு ஏகப்பட்ட பெட்டிசன் வருது. 'டிஸ்ட்ரிக்ட்' முழுக்க, 334 'கேம்ப்' நடத்தணும்; இதுவரைக்கும், 72 நடந்துருக்கு. உரிமைத்தொகை கேட்டு, 37 ஆயிரம் பேரு 'பெட்டிசன்' கொடுத்திருக்காங்க.
எப்படியும் ஒரு லட்சத்தை தாண்டிடும்னு நெனைக்கிறாங்க. ஆபீசர்ஸ் வீடு வீடா போயி விசாரிச்சு, பரிந்துரை செய்வாங்கன்னு சொல்றாங்க. 'தகுதியில்லை'ன்னு சொல்லி நிராகரிச்சிட்டா, அசெம்ப்ளி எலக்சன்ல லேடீஸ் ஓட்டு எதிரா திரும்பிடுமேன்னு, உடன்பிறப்புகளுக்கு இப்பவே உதறல் வந்துருச்சு''
''உடனே மித்ரா, ''ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையில நடந்திருக்கிற தில்லாலங்கடி வேலையை பத்தி, ஏற்கனவே நாம பேசுனோமே. அது சம்பந்தமா, வடக்கு மாவட்டத்துல, மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம், தொண்டாமுத்துார் நிர்வாகிகள்கிட்ட 'என்கொயரி' பண்ணியிருக்காங்க.
20க்கு மேற்பட்ட பூத்கள்ல தப்பு நடந்திருக்கறது தெரிஞ்சிருக்கு. அதுல, மேட்டுப்பாளையம் நிர்வாகிக்கு ஒதுக்குன பூத்திலேயே தப்பு நடந்திருந்ததை கண்டுபிடிச்சிருக்காங்க. எல்லா பூத்லயும் மறுபடியும் ஆரம்பிக்கச் சொல்லி இருக்காங்க,'' என்றாள்.
உடன்பிறப்புக்குள் கசப்பு ''கட்சி தாவி வந்தவங்களுக்கு பதவி கொடுக்கறதுனால, உடன் பிறப்புகள் மனக்கசப்புல இருக்காங்களாமே...''
''ஆமாக்கா... நீங்க சொல்றது கரெக்ட்டுதான்! பெரியநாயக்கன்பாளையம் ஏரியாவுல ஒன்றிய செயலாளரா நியமிக்கப்பட்டவரு, அ.தி.மு.க.,வுல இருந்து சில மாசத்துக்கு முன்னாடி வந்தவராம். அவருக்கு ஒன்றிய பொறுப்பு கொடுத்தது, உடன்பிறப்புகளுக்கு பிடிக்கலை. அதைப்பத்தி கொஞ்சமும் கவலைப்படாம, சோமையம்பாளையம் பஞ்சாயத்து ஆபீசுல ஒக்காந்துக்கிட்டு, அவரைக் கேக்காம எந்த வேலையும் செய்யக் கூடாதுன்னு, தெனமும் பஞ்சாயத்து பேசுறாராம்,''
''இதை கேள்விப்பட்ட தாமரை கட்சிக்காரங்க, ஆபீசுக்கு நேர்ல போயி, 'இது ஊராட்சி ஆபீசா... கட்சி ஆபீசா'ன்னு... ஊராட்சி செயலர்கிட்ட வாக்குவாதம் செஞ்சிருக்காங்க. அ.தி.மு.க.,காரங்களும் போராட்டம் நடத்துறதுக்கு, 'பிளான்' வச்சிருக்காங்களாம்...''
'கதர் சட்டை'க்கும் ஆசை ''அதெல்லாம் இருக்கட்டும்... அசெம்ப்ளி எலக்சனுக்கு தொகுதியை கைப்பத்தறதுல போட்டி ஜாஸ்தியாகிட்டே போகுதாமே...''
''ஆமாக்கா... சூலுார் தொகுதிக்கு தி.மு.க., கூட்டணியில காங்கிரஸ் கட்சிக்காரங்களும் 'சீட்' கேக்குறாங்களாம். ஆளாளுக்கு தங்களோட ஆதரவாளர்கள் மூலமா, தலைமைக்கு பிரஷர் குடுக்க ஆரம்பிச்சிருக்காங்க. இருந்தாலும், புதுமுகங்களுக்கே வாய்ப்பு அதிகம்னு பேசிக்கிறாங்க. இதே மாதிரி, அ.தி.மு.க., கூட்டணியில அ.தி.மு.க., வேட்பாளர் நிக்கிறது உறுதியாகிடுச்சாம்...,'' என்றபடி, இருக்கையில் அமர்ந்தாள் மித்ரா.
கருப்பு சேலை சேர்மன் ''அதெல்லாம் இருக்கட்டும்... கார்ப்பரேஷன் கவுன்சில் கூட்டத்துக்கு ஜோனல் சேர்மன் ஒருத்தரு கருப்பு சேலை கட்டிட்டு வர்றதா இருந்துச்சாமே...''
''அதுவா... கார்ப்பரேஷன் ஆபீசர்ஸ் பலரும் சேர்மன் சொல்ற வேலையை செய்றதில்லை. கமிஷனர் சொன்னா மட்டுமே செஞ்சு கொடுக்குறாங்க. கவுன்சிலரோ, சேர்மனோ வேலை சொன்னா, இழுத்தடிக்கிறாராம். இல்லேன்னா, சட்டத்துல இடமில்லைன்னு சொல்லி நழுவுறாராம். ஜோனல் ஆபீசர்ஸ் பலரும் கமிஷனர் கட்டுப்பாட்டுல இருக்கறதுனால, மக்கள் பிரதிநிதிகள் சொல்றதை கேக்குறதில்லைங்கிற புலம்பல் சத்தம் அதிகமாயிடுச்சு,''
''கட்சி தலைமை கவனத்துக்கு கொண்டு போறதுக்காக, கருப்பு சேலை கட்ட முடிவு பண்ணி, சக சேர்மன்கள்கிட்ட ஆலோசனை செஞ்சிருக்காங்க. கவர்மென்ட்டுக்கு கெட்டபேரு வந்துரும்னு சொன்னதுனால, கடைசி நேரத்துல அந்த முடிவை மாத்திட்டு, கவுன்சில்ல சுருக்கமா பேசி முடிச்சிட்டாங்கன்னு, ஆளுங்கட்சி கவுன்சிலருங்க சொல்றாங்க,''
ஆபீசருக்கு பணி நீட்டிப்பு ''ஆளுங்கட்சிக்கு விசுவாசமா இருக்கறதுனால, உளவுத்துறை ஆபீசர் ஒருத்தருக்கு பணி நீட்டிப்பு கொடுத்திருக்காங்களாமே...''
''லோக்சபா எலக்சன் சமயத்துல, கள நிலவரத்தை துல்லியமா கணிச்சு 'ரிப்போர்ட்' கொடுத்ததால, ஆளுங்கட்சி தலைமை அசந்துடுச்சாம். அவருக்கு ஓராண்டு பணி நீட்டிப்பு கொடுத்தாங்க; இப்போ, மறுபடியும் பணி நீட்டிப்பு கொடுத்திருக்காங்க. நம்மூர்ல இ.பி.எஸ்., பிரசாரத்தை ஆரம்பிச்சப்போ, உன்னிப்பா கவனிச்சு, அவரோட 'மூவ்மென்ட்' பத்தி, கவர்மென்ட்டுக்கு 'ரிப்போர்ட்' அனுப்புனாராம். ஆளுங்கட்சியில 'சீட்' கேட்டு 'அப்ளிகேசன்' போடுறவங்களை பத்தி 'என்கொயரி' செஞ்சு, உள்விவகாரங்களை மேலிடத்துக்கு அனுப்பிட்டு வர்றாராம். அசெம்ப்ளி எலக்சனுக்கு தேவைப்படுவாருன்னு, பணி நீட்டிப்பு கொடுத்திருக்காங்கன்னு, போலீஸ்காரங்க பேசிக்கிறாங்க,''
அஞ்சு இலக்க லஞ்ச ஆபீசர் ''பில்டிங் அப்ரூவல் கொடுக்கறதுக்கு, அஞ்சு இலக்கத்துல லஞ்சம் கேக்குறாங்களாமே...'' என, 'ரூட்' மாறினாள் சித்ரா.
''ஆமாக்கா, நானும் கேள்விப்பட்டேன்! வடக்கு பகுதியை சேர்ந்த புறநகர்ல இருக்கற டவுன் பஞ்சாயத்துல, இதுக்கு முன்னாடி, 'பிளான் அப்ரூவல்' கொடுக்கறதுக்கு, நான்கு இலக்கத்துல லஞ்சம் வாங்கியிருக்காங்க. ஏழை எளிய ஜனங்க வந்தா, லஞ்சம் வாங்காம கையெழுத்துப் போட்டுக் கொடுத்தாங்களாம்,''
''இப்போ, அறுபடை முருகன் பேரை கொண்ட ஒருத்தரு, செயல் அலுவலரா இருக்காரு. 'பிளான் அப்ரூவல்' கொடுக்கறத்துக்கு, குறைஞ்சது, 10 ஆயிரத்துல ஆரம்பிச்சு, 30 ஆயிரம் ரூபா வரைக்கும் லஞ்சம் கேக்குறாராம். இதுசம்பந்தமா யாராச்சும் கேட்டா, 'எட்டு லட்சம் ரூபா 'லம்ப்பா' கொடுத்து, 'போஸ்ட்டிங்'கிற்கு வந்திருக்கேன்; எப்போ சம்பாதிக்கிறது'ன்னு கேக்குறாராம். அவரு கேக்குற தொகையை லஞ்சமா கொடுக்க முடியாம ஜனங்க திண்டாடுறாங்க,''
வராத புத்தகத்துக்கு 'கணக்கு' ''அதெல்லாம் இருக்கட்டும். கார்ப்பரேஷன் ஸ்கூலுக்கு கவர்மென்ட் கொடுக்கற கதைப்புத்தகங்கள் போயி சேரலையாமே...''
''அதுவா... ஸ்டூடன்ட்ஸ் மத்தியில வாசிப்பு பழக்கத்தை வளர்க்கறதுக்காக... பள்ளி கல்வித்துறையில வாசிப்பு இயக்கம் நடத்துறாங்க. அதுல, 16 கதைப்புத்தகம் கொடுக்குறது வழக்கம். கார்ப்பரேஷன் ஸ்கூலுக்கு புத்தகங்களே குடுக்காம, குடுத்ததா கணக்கெழுதிட்டதா சொல்றாங்க. இந்த திட்டம் ஒழுங்கா செயல்படுதான்னு, கல்வித்துறையில ஆய்வு செய்யாம இருக்காங்களாம்,'' என்றபடி, நடை பயிற்சியை முடித்து, ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்தாள் மித்ரா.
பின் இருக்கையில் அமர்ந்து, வேடிக்கை பார்க்கத்துவங்கினாள் சித்ரா.