பொறுப்பு மாற போகுது தி.மு.க.வில்; மறக்க முடியாத அந்த கடைசி வசூல்
பொறுப்பு மாற போகுது தி.மு.க.வில்; மறக்க முடியாத அந்த கடைசி வசூல்
UPDATED : ஆக 18, 2026 05:24 AM
ADDED : ஆக 17, 2026 09:33 PM

வாலாங்குளத்தின் கரையோரம் ஒரு ரவுண்டு ஜாகிங் முடித்து விட்டு சித்ராவும், மித்ராவும் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தனர்.
சுதந்திர தினம் எப்டி போச்சு?
வ.உ.சி. மைதானத்துல நடந்த விழா செலவை, ரெண்டு தாலுகா ஆபீஸ்களையும் ஏத்துக்க சொல்லிருக்காங்க..
அது வழக்கம்தான..
இப்ப மாறிடுச்சு. 'லஞ்ச ஒழிப்பு துறை எங்கள குறிவச்சு ரெய்டு பண்ணி அசிங்கம் பண்ணிட்டாங்க. டெய்லி வருமானத்துக்கு வழியில்லாம போயாச்சு. இந்த நிலைமைல எல்லா செலவையும் எங்க தலையில கட்டாதீங்க...'னு புலம்பினாங்களாம்.
அது சரிதானே.. நேர்மையா இருந்தா காசு வராது. காசு இல்லைன்னா இந்த மாதிரி செலவுக்கு அவங்க எங்க போவாங்க.. அரசாங்கம் அதுக்கும் நிதி ஒதுக்கணும்.
லஞ்சம் ஒழிஞ்சிருச்சுனு சொல்ல முடியாது. மறுபடியும் ரெய்டு நடத்த வேண்டிய அளவுக்கு பழைய கட்டிங் நடக்குதாம்.
லஞ்சம் வாங்குனா சஸ்பெண்ட் பண்றது மட்டும் பத்தாதுனு சொல்றியா?
ஆமா. துறை நீதியான விசாரணைனு சொல்லுவாங்க. கடைசில குற்றம் நிரூபணம் ஆகலைனு முடிச்சு விட்ருவாங்க. அதான் ஒருத்தருக்கும் பயம் வரல. மக்களுக்கும் நம்பிக்கை வரல.
காவல் அம்மன் கோயில்ல ரிடையரான ஒருத்தரு இன்னும் அதிகாரம் செஞ்சுட்டு இருக்காராமே
அவரோட வாரிசுக்கு வேலை குடுத்துட்டாங்க. இருந்தாலும் இவர் கோயிலுக்கு வர்றாராம்; காணிக்கை வசூல் பண்றாராம்.
உண்டியலை திருடுன விவகாரம் என்னாச்சாம்?
4 பேர அரெஸ்ட் பண்ணி ஜெயிலுக்கு அனுப்புனாங்க. ஜாமின்ல எடுக்க மூவ் பண்ணாங்க. கோர்ட் ஏத்துக்கல; இப்ப ஐகோர்ட் போறதா சொல்றாங்க.
அந்த கோயில்ல முன்னெல்லாம் பட்டு சேலை ஏலம் சிண்டிகேட் போட்டு நடந்துச்சாம். டாப் குவாலிட்டி சேலைகளை தெரிஞ்சவங்களுக்கு மட்டும் குடுப்பாங்களாம். இப்ப முதல் தவையா எந்த பாரபட்சமும் இல்லாம வெளிப்படையா ஏலம் நடத்துனதுல பக்தர்களுக்கு சந்தோஷமாம்.
ஒரு வழியா மாநகராட்சில 54 பேரை வீட்டுக்கு ஔப்பிட்டாங்க, போல.
மழை ஓய்ஞ்சும் தூவானம் விடலைம்பாங்க. அதுல பலபேர் பில் கலெக்டர்களாம். எப்படியும் வேலை போயிடும்னு தெரிஞ்சதும், ஒண்ணர மாசமா சுறுசுறுப்பா வசூல் நடத்தி ஒதுக்கிட்டதா சொல்றாங்க. ஸ்பெஷல் ஆடிட் நடக்க போகுதாம்.
திமுகவுல பெரிய மாற்றங்கள் வர போகுதாமே?
இதுவரைக்கும் பெருசா எந்த மாற்றமும் அந்த கட்சில வரலையே..
ரெண்டு தொகுதிக்கு ஒரு மாசெ வீதம் போட போறாங்களாம். 10 தொகுதில 5 மாசெ வந்துருவாங்க. வெயிட் குறைஞ்சிரும். மாநகர் மாசெ தப்பிருவாராம். புறநகர் கை மாறுதாம்.
மேட்டுப்பாளையம் பத்திரப்பதிவு ஆபீசுல என்ன பிரச்னையாம்?
அங்க ஒரு ஆபீசர் ஹேண்ட்பேக் நிரப்புறதுல கில்லாடியாம். பெரிய ஆபீசர்கிட்ட புகார் சொல்லியும் கண்டுக்கலைனு டாக்குமென்ட் ரைட்டர்ஸ் குமுறிட்டு இருக்காங்க. ரெய்டு வந்தாதான் சிக்குவாங்கனு சொல்றாங்க.
அன்னுார்ல சில தியேட்டர்கள்ல இஷ்டத்துக்கு டிக்கெட் விலைய ஏத்தினதா புகார் கொடுத்தும் ஆபீசர்ஸ் கண்டுக்கறது இல்லையாம்.
எல்லா ஊர்லயும் இதான் சொல்றாங்க. மேல்மட்டத்ல லஞ்சம் இல்லையே தவிர கீழ பலரும் பழைய ரூட்ல தான் போறாங்களாம்...
உன்மைதான். டவுன்ஹால் கார்ப்பரேஷன் ஆபீசுல பர்த், டெத் சர்ட்டிபிகேட்ல திருத்தம் செய்றாங்க. அதுல கையெழுத்து போட வேண்டிய அதிகாரிங்க 15 நாளைக்கு ஒருதடவதான் வர்றாங்க. மூவாயிரம் ரூபா கண்ல காட்டினாதான் சர்டிபிகேட் கைக்கு வருமாம். இல்லாதவங்க என்ன செய்வாங்க.. அதான் நெறய பெண்டிங்ல கிடக்காம்.
லஞ்சம் வாங்கினா ஆயுள் தண்டனை, மொத்த சொத்தும் பறிமுதல்னு அதிரடியா சட்டம் வந்தா ஒருவேளை லஞ்சம் ஒழியலாம். அப்படி ஒரு சட்டம் நிறைவேற கட்சிகள் விட்ருவாங்களா, என்ன?
திடீர் தூறல் இருவரையும் ஸ்கூட்டரை நோக்கி விரட்டியது.
