தொண்டாமுத்துார்ல கட்டுவாங்களா 'டின்'னு பொள்ளாச்சி மீட்டிங் மேல ஒரு கண்ணு...
தொண்டாமுத்துார்ல கட்டுவாங்களா 'டின்'னு பொள்ளாச்சி மீட்டிங் மேல ஒரு கண்ணு...
ADDED : ஜூலை 07, 2026 06:50 AM

கி ராஸ்கட் ரோட்டில் ஷாப்பிங் வந்திருந்த சித்ராவும் மித்ராவும், மழைக்கு ஒரு துணிக்கடை வாசலில் ஒதுங்கி நின்றனர்.
''நம்ம மாவட்டத்து அமைச்சர்கள் ரெண்டு பேருக்கு இடையில முட்டல் மோதல் அதிகமாகிட்டே இருக்குதாமே...''
''ஆமாப்பா, கட்சி நிர்வாகிகளா இருந்த வரைக்கும் நல்ல நண்பர்களா இருந்தாங்க. மினிஸ்டர் பதவி வந்ததும் 'யாரு பெரிய ஆளு'ங்கிற ஈகோ பத்திக்கிச்சு. அவுங்கவுங்க ஏரியாவுல ரெண்டு பேரும் ஒட்ற போஸ்டர்ல ஒருத்தர் பேர ஒருத்தர் போடுறது இல்ல. மீறி யாராச்சும் போஸ்டர்ல போட்டோ போட்டா, அந்த நிர்வாகிய கட்சி பதவில இருந்து துாக்கிடுவோம்னு ரெண்டு தரப்பு ஆதரவாளர்களும் மிரட்டுறாங்களாம்''
''ரெண்டு மினிஸ்டர்களையும் மீறி, சீனியர் அதிமுக எக்ஸ் மினிஸ்டர் இங்க ஆதிக்கம் செலுத்த பாக்குறாரு. அவரோட நம்பிக்கைக்கு உரிய லேடி ஆபீசர வெளியூருக்கு டிரான்ஸ்பர் போட்ட பிறகும் உடனே திரும்ப வந்தத எல்லாரும் பிரமிப்பா பேசிக்கிறாங்க''
''ஓகோ...''
''இதையும் கேளு... ஜாதி நெட்வொர்க்ல சீனியர் அமைச்சர் தான், பெண் அதிகாரிய இந்த பதவிக்கு சிபாரிசு செஞ்சாராம். அதனால மாவட்ட அமைச்சர்கள் ரெண்டு பேருக்கும் இவரு மேல அதிருப்தியாம்.''
''கோட்டை ஸ்டிராங்கா தான் இருக்குனு சொல்லு.. மா.செ பதவி திரும்ப கிடைக்காத மாஜி எப்படி இருக்கார்?''
''இன்னும் அப்செட்ல தான் இருக்காரு. ஆதரவாளர்களை கூப்ட்டு மீட்டிங் போட்டு வீடியோவை கசிய விட்டாரு. ஆனா அதுவே பேக்ஃபயர் ஆயிருச்சு. இதுவரைக்கும் எல்லா மேடைலயும் அவருக்கு இடது, வலதா உட்கார்ந்திருந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அம்மனும், அருணும் கூட வரலைனு தெரிஞ்சு போச்சு...''
''அடடே...''
''அதனால, மாஜி கூடுதல் அப்செட்டாம். 12ம் தேதி பொள்ளாச்சியில அண்ணாமலை நடத்ற மீட்டிங் எப்படி போகுதுனு பார்த்துட்டு, அடுத்த 'மூவ்' எடுப்பாராம்''
''ஆனா தொண்டாமுத்துார்ல அவரோட ஆதரவாளர்கள் எதுக்கோ ரெடியாகிட்டு இருக்காங்களாமே...''
''ஆமா, புது மா.செ. வேலுசாமிய சூலுார், கிணத்துக்கடவுல நிர்வாகிகள் மீட்டிங் நடத்திட்டாரு. தொண்டாமுத்துார்ல எப்போ நடத்த போறார்னு காத்துட்டு இருக்காங்க. தொண்டர்கள் ஆதரவு மணிக்கா, சாமிக்கானு அன்னிக்கு தெரிஞ்சிருமாம்''
''உடன்பிறப்புகள் மேட்டர் எதுவும் இல்லையா...''
''கீழ் மட்ட உ.பி.க்கள் தோல்விய ஏத்துகிட்டு, உள்ளாட்சி தேர்தலுக்கு என்ன செய்யலாம்னு பேச ஆரமிச்சுட்டாங்க. தலைமை மட்டுந்தான் இன்னமும் தோத்ததை ஜீரணிக்க முடியாம 3 மாசம் 6 மாசம்னு தனக்கு தானே அவகாசம் குடுத்துட்டு இருக்கு. தொண்டர்கள் அத பாத்து பரிதாபம் காட்றாங்க..”
“கட்சி அமைப்புல அதிரடி மாற்றம் வரும்னு இளவரசர் சொன்னாராமே..”
“நீ வேற. கட்சிக்குள்ள தலைமை அதிரடி காட்றது எல்லாம் ஜெயலலிதா காலத்தோட ஓவர். இப்பலாம் சாட்டைய எடுத்து தன்னையே அடிச்சிக்றது தான் நடக்குது..”
“நீ அண்ணாமலைய சொல்றியா, ஆல் இன் ஆல் அழகுராஜால வர்ற எம்மெஸ் பாஸ்கர சொல்றியா..”
“என்னய வம்புல மாட்டாதீங்க. லண்டன்ல இருந்து தலைவர் திரும்பி வந்ததும், கட்சி சீரமைப்புனு சொல்லி, ரெண்டு தொகுதிக்கு ஒரு மா.செ. போடுவாங்களாம். இப்போ இருக்கற 3 மா.செ.க்கள மாத்த மாட்டாங்களாம். பொள்ளாச்சி, வால்பாறை தொகுதிக்கு மா.செ.வா, சபரி கார்த்திகேயனை போடுவாங்கனு பேச்சு ஓடுது. கவுண்டம்பாளையம், மேட்டுப்பாளையத்துக்கு யாரை நியமிப்பாங்கனு தெரியல..''
''நம்மூர் தொழில் அமைப்புகள் ஏதோ அதிருப்தில இருக்காங்களாமே..''
''மினிஸ்டர் சம்பத்குமார் தலைமைல சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்களோட தேவைகள் என்னன்னு கலெக்டர் ஆபீஸ்ல ஆய்வு கூட்டம் நடந்துச்சு. அதுக்கு தொழில் அமைப்புகள கூப்ட்டு கருத்து கேக்கலையாம்..”
''அதான் தொழில் அமைச்சர் கீர்த்தனா ஏற்கனவே வந்து தொழில் அமைப்புகளை பாத்து பேசிட்டாரே..''
''ஆனா சிறு குறு நடுத்தர தொழில் அமைச்சர் மதன்ராஜா ரெண்டு மூணு தடவ நம்மூருக்கு வந்தும், தொழில் அமைப்புகள சந்திக்கலயாம்''
''அட, அவரோட மகள் இங்கதான் படிக்கிறாங்க. கூட அமைச்சர் மனைவியும் தங்கி இருக்காங்க. மனைவி, மகள பாக்க மதன்ராஜா வந்துட்டு போறார். ஆனாலும், ஒருவாட்டி இவங்கள மீட் பண்ணி பேசி இருக்கலாம் தான்..''
”மாநகராட்சி மத்திய மண்டலத்ல நடந்த லஞ்ச ஒழிப்பு சோதனைல பெருசா ஒண்ணும் தேறலயாமே..”
“மாஜி அமைச்சர் வீட்ல நடந்த சோதனைலயே எதுவும் சிக்கல. அவர் கூலா வெளிநாடு போயிட்டார். எல்லா இடத்லயும் கருப்பாடுகள் இருக்கு. ரெய்டு பிளான் ரெடி ஆனதுமே தகவல் போயிருதுனு ஒரு ஆனஸ்ட் ஆபீசர் எங்கிட்ட வருத்தப்பட்டார்..”
“எக்சாக்ட்லி. சொறிஞ்சு பழகின கை சும்மா இருக்காதுனு சொல்லுவாங்க. சூலூர் யூனியன் ஆபீஸ்ல போன ஆட்சியில, அமைச்சர் சொந்தக்காரர்ங்கற போர்வைல புகுந்து விளையாடின ஒரு ஆபீசரும் அந்த ரகம்தான். இந்த ஆட்சிலயும் ஆட்டத்த நிறுத்தல. ஆபீஸ் மேட்டர்லாம் ஷேர் பண்ணி கல்லா கட்றாராம். இதனால பி.டி.ஓ.களுக்கும் அவருக்கும் மோதல் உச்சத்துல இருக்கு''
- மழை நின்று விட, சித்ராவும் மித்ராவும் ரோட்டில் இறங்கி ஸ்கூட் டரை நோக்கி நடந்தார்கள்.
