ADDED : ஏப் 20, 2024 10:43 AM

உக்கடம் பெரியகுளத்தில், ஷார்ட்ஸ், டீ-சர்ட்டுடன், நிறைய பேர் வாக்கிங்கில் பிசியாக இருந்தனர். ஒருவர் மட்டும், பேன்ட், சட்டை சகிதமாக கழுத்தில் ஒரு கேமரா, கையில் பென்சில், பேப்பருடன், குளத்தையே உற்று நோக்கி கொண்டிருந்தார்.
என்னதான் பண்றாருன்னு பார்க்க, 15 நிமிஷம் வெயிட் பண்ணோம். அவர் அங்கேயே ஒரு பெஞ்சுல உட்கார்ந்து பேப்பர் பென்சிலுடன் பரபரப்பானார். எட்டிபார்த்தால், ஒரு பறவை பறக்குற ஓவியத்தை தத்ரூபமா வரைஞ்சிட்டு இருந்தார். கை குலுக்கி நாம் அறிமுகப்படுத்திக் கொண்டோம். பேசத்துவங்கினார் அவர்.
''என் பேரு துரைசாமி. பேர்ட்ஸ் மேல, சின்ன வயசுல இருந்தே தனி கிரேஸ். வீட்டுல நிறைய பேர்ட்ஸ் வளர்க்குறேன். பறவைகிட்ட இருந்து ரசிக்கவும், கத்துக்கவும் நிறைய விஷயம் இருக்கு. வீட்டுல வளர்க்க முடியாத பறவைகளை பாக்குறதுக்கு நிறைய டிராவல் பண்ணுவேன்.
ஒருதடவை, ரெண்டு ஆண் மயில் சண்டை போடுறதை பாத்தேன். ரொம்ப ஆக்ரோஷமா இருந்துச்சு. இதை போட்டோ எடுக்க, சுமார் 3 மணி நேரம் வெயிட் பண்ணேன். ஒரு ஆண்மயில் தன்னோட தோகையை சிலிப்புனதும், ரெண்டாவது தரையில இருந்து மேல பறக்க ரெடியாச்சு. என் போக்கஸ் அதுலயே இருந்ததால் நான் எதிர்பார்த்ததை விட அந்த போட்டோவோட அவுட்புட், சூப்பரா இருந்துச்சு.
பெலிகான், ஹார்ன்பில், ஆப்ரிக்க ஓபன் பில், கிரே ஹெரான், ஸ்டோர்க் என, 500 வெரைட்டி பேர்ட்ஸ் போட்டோ என்கிட்ட இருக்கு. கேமரா போக்கஸ் பண்ணும் போது, சில காட்சிகள கிளிக் பண்ண தவறிடுவோம். அத மனசுல பதிய வச்சிட்டு, டிராயிங் வரைவேன். ஆத்மார்த்தமான உணர்வுடன் கூடிய அனுபவங்களால் பறவைகளுடன் தினம் தினம் பறக்கிறேன்.இதுதான் இப்போ முழுநேர ஹாபி'' என்றார்.
மேலும் அவர் கூறுகையில், ''எனக்கு, 58 வயசாகுது. தனியார் கம்பெனியில ரீஜினல் மேனேஜரா இருந்து வி.ஆர்.எஸ்., வாங்கிட்டேன். பிடிச்சதை ரசிச்சு செய்யணும்கிறதை தவிர, இந்த வயசுல எதை சாதிக்க போறேன். இதை பண்றதால டெய்லியும் சாப்பிடும் 6 பி.பி., டேப்லெட்டுக்கு, இப்போ முழுக்கு போட்டாச்சு'' ன்னு சொன்னவர், மீண்டும் கேமராவை கையில் எடுத்தார்.
எங்க போறீங்க சார் என்றதும், கண்களை கூர்மையாக்கி, பறக்க காத்திருந்த ஒரு பெலிக்கனை கிளிக் செய்தார். சற்று நேரத்தில், இறக்கை விரித்த அந்த பறவையோடு சேர்ந்து, நினைவுகளால் ஆகாயம் நோக்கினார் துரைசாமி.

