விலங்குகளுக்கும் மன அழுத்தம்; என்ன செய்யும் தெரியுமா.. சொல்கிறார் மகாலட்சுமி
விலங்குகளுக்கும் மன அழுத்தம்; என்ன செய்யும் தெரியுமா.. சொல்கிறார் மகாலட்சுமி
ADDED : ஜூலை 25, 2025 09:57 PM

செல்லப்பிராணிகளுக்கு ஏற்படும் பல நோய்களுக்கு முக்கிய காரணியாக இருப்பது மன அழுத்தம் தான். நம் மகிழ்ச்சிக்காக, ஆசைக்காக அவற்றை வாங்கி, முறையாக பராமரிக்காமல் விட்டுவிடுவதால், அவை தன்னையே அழித்து கொள்ளும் நிலைக்கு கூட செல்கின்றன.
எந்தெந்த வகை செல்லப்பிராணியை, யாரெல்லாம் வாங்கலாம் என்ற புரிதல் இல்லாததால் தான் இப்பிரச்னையே ஏற்படுகிறது. இதிலும், மார்கெட்டில் அதிகம் வலம்வரும் புதிய வகை எக்ஸாடிக் செல்லப்பிராணிகளை எப்படி வளர்க்க வேண்டுமென்ற அடிப்படை அனுபவம் இல்லாமல் பலரும் வாங்குகின்றனர்.
பின் அவை ஏதேனும் நோய்வாய்ப்பட்டால், மருத்துவரின் ஆலோசனை பெறாமல், செல்லப்பிராணிகளுக்கான கடைகளில் கிடைக்கும் மருந்தை வாங்கி கொடுக்கின்றனர். அக்குறிப்பிட்ட பிரச்னை சரியானால், தொடர்ந்து அந்த மருந்தையே கொடுக்கின்றனர்.
இதனால், செல்லப்பிராணிகளின் முக்கிய உள் உறுப்புகளான கல்லீரல், சிறுநீரகம் பெரிதும் பாதிக்கப்படும். பிறந்து சில ஆண்டுகளிலேயே அவை இறக்கும் அபாயமும் ஏற்படுகிறது.
புதுவகை செல்லப்பிராணி வாங்கும் முன்... பப்பி, மியாவ், பறவை மட்டுமே முன்பு செல்லப்பிராணியாக வளர்த்தனர். தற்போது, மார்க்கெட்டில் எக்கச்சக்க புதிய வகை செல்லப்பிராணிகள் அறிமுகப்படுத்துகின்றனர். குறிப்பாக, கொறிக்கும் வகை விலங்கான எலி, முயல், கினிபிக்ஸ், ஹாம்ஸ்டர், பறக்கும் அணில், பாம்பு வகைகளை வாங்கும் போது, அதன் உணவு முறை, பராமரிப்பு, உடல் ரீதியாக ஏற்படும் பாதிப்புகள் ஆகியவற்றை தெரிந்து கொண்ட பிறகே, வாங்க வேண்டும்.
கினிபிக்கை பொறுத்தவரை, இதன் பற்கள் தினசரி 1 மி.மீ., அளவுக்கு வளர்ந்து கொண்டே இருக்கும். இதற்கு மென்மையான உணவுகள் கொடுத்தால், பல்சார்ந்த பிரச்னைகள் ஏற்படும். கொறிப்பதற்கு ஏற்ற கடின வகை உணவுகளை கொடுக்க வேண்டும்.
ஹாம்ஸ்டரை, கினிபிக் போன்றவற்றிற்கு சுவாச பிரச்னைகள் ஏற்படலாம். சளி, தும்மல் இருக்கும். ஹாம்ஸ்டர் முறையாக பராமரிக்காவிடில், அதன் தோலில் 'மைட்ஸ்' எனப்படும் உண்ணிகள் ஏறி, தோல்வியாதி ஏற்படும்.
பறக்கும் அணிலுக்கு பெரிய அளவிலான கூண்டு இருக்க வேண்டும். சிறிய இடத்தில் இதை வளர்த்தால், ஸ்ட்ரஸ் ஆகிவிடும். அதிக உணவு கொடுத்தால், உடல்பருமன் அடைந்தால், பறக்க முடியாமல் அவதிப்படலாம். இதன் உடல் வளர்ச்சிக்கேற்ற நுண்ணுாட்ட சத்துகள் உணவில் இல்லாவிடில், சத்து குறைபாடு பிரச்னை ஏற்பட்டு, சோர்வடைந்துவிடும்.
மேலும், இந்த வகை எக்ஸாடிக் செல்லப்பிராணிகளில் சில, இரவில் அதிக சுறுசுறுப்புடன் இருக்கும். அச்சமயத்தில் வீட்டிலுள்ள விளக்குகளை அணைத்துவிட்டு, நீங்கள் துாங்கிவிட்டால், அவை விளையாட முடியாமல் மன அழுத்தத்திற்கு ஆளாகிவிடும்.
மன அழுத்தமே முதற்காரணி செல்லப்பிராணிகளுக்கு ஏற்படும் பல நோய்களுக்கு முதற்காரணியாக இருப்பது மன அழுத்தம் தான். முறையாக பராமரித்து, அவற்றுடன் விளையாட நேரம் ஒதுக்க வேண்டும். அதன் அன்றாட இயக்கத்தில் மாற்றம் ஏற்பட்டால், உடனே கண்டுபிடிக்க தெரிந்திருக்க வேண்டும். இல்லாவிடில், அவை தன்னை தானே அழித்து கொள்ளவும் துணிந்து விடும்.
உதாரணமாக பறவைகள் மன அழுத்தத்தில் இருந்தால், அதன் இறக்கையை அதுவே பிய்த்து கொள்ளும். சில நேரங்களில், சாப்பிடாமல் அடம் பிடித்தல், திடீரென கடித்தல் போன்றவை கூட, செல்லப்பிராணிகள் மன அழுத்தத்தில் இருப்பதற்கான வெளிப்பாடு தான். இதை ஆரம்பக்கட்டத்திலேயே அறிந்தால், மற்ற நோய்கள் பரவாமல், அதன் ஆயுட்காலம் முழுக்க, ஆரோக்கியமாக வளருவதை உறுதி செய்யலாம்.
-வி.மகாலட்சுமி,
கால்நடை உதவி மருத்துவர், பொள்ளாச்சி.