ADDED : ஜன 24, 2026 07:14 AM

மதுரையை சேர்ந்த 'சோனி பெட்ஸ்' உரிமையாளர் கபில்; பி.டெக் பட்டதாரியான இவர் நம்மிடம் பகிர்ந்தவை:
கல்லுாரி படிக்கும் போதே ப்ரீடிங் துறையில் கால்பதித்ததால், செல்லப்பிராணிகளுக்கான சேவைத்துறையில் புதுமையான பிசினஸ் செய்ய முடிவெடுத்தேன். அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் பெரும் வகையில், பகல்நேர பராமரிப்பு, நீண்ட நாள் பராமரிப்பு, பயிற்சியளித்தல், செல்லப்பிராணிகளுக்கான அசைவ உணவு தினசரி தயாரித்து டோர்டெலிவரி செய்தல், பப்பி விற்பது என அடுத்தடுத்தாக விரிவுப்படுத்தினேன். ஆரம்பத்தில் சென்னை, மூலக்கடையில் தான் பிசினஸ் ஆரம்பித்தேன். தற்போது மதுரைக்கு மாறிவிட்டோம்.
என்னிடம் உள்ள அனைத்து இன பப்பிகளுக்கும் ஒபீடியன்ஸ் பயிற்சி அளித்துள்ளேன். புதிய ஆட்களிடம் அவை எளிதில் நெருங்கிவிடும். பிளடி பக்கர், நாய் சேகர் ரிட்டர்ன், ஜென்ம நட்சத்திரம், யோலோ என பல படங்களில், என் பப்பிகள் நடித்துள்ளன. போட்டோ ஷூட்களுக்காக பப்பி எடுத்து செல்வோரும் இருக்கின்றனர்.
சென்னை போன்ற பெருநகரங்களில், செல்லப்பிராணிகளை வளர்க்க முடியாத சூழலில் இருப்போருக்காக 'லவ் பார் தி டே' என்ற புதிய நடைமுறையை அறிமுகம் செய்தோம். எங்களிடம் அனைத்து இன பப்பிகளும் இருப்பதால், எந்த ப்ரீட், என்ன தேதியில் கேட்கிறார்களோ, எங்களின் உதவியாளருடன் அப்பப்பியை அனுப்பி வைப்போம். காலை 11- மாலை 5 மணி வரை, பப்பியுடன் பொழுதை கழிக்கலாம். பப்பியை பராமரிப்பது, உணவளிப்பது, கையாள்வதற்கு உதவியாளர் உதவுவார். ஒருநாள் பப்பியுடன் பொழுது கழித்து, மீண்டும் மீண்டும் அதே பப்பியை அனுப்பி வைக்குமாறு கேட்பவர்களே அதிகம்.
கடந்த ஓராண்டில் மட்டும், 3 ஆயிரம் பேர், எங்கள் பப்பியுடன் நேரம் செலவழித்துள்ளனர். இதற்கு ஒருநாளைக்கு கட்டணம் ரூ.2,500. பெரும்பாலும் ஐடி., துறையில் பணிப்புரிவோரே, பப்பி வேண்டுமென அணுகியுள்ளனர். மன அழுத்தம், தனிமை, வெறுமை என, மன ரீதியான காயங்களுக்கு செல்லப்பிராணிகளே மாமருந்து!

