PUBLISHED ON : நவ 02, 2025

விறுவிறுப்பு, பரபரப்பு அனைத்தும் 'கம்மி' ஆனதால், 'டம்மி'யான த்ரில்லர்!
அடுத்த ஐந்து நாட்களில் ஐந்து நபர்களை கொல்லப் போவதாக, 'டிவி' நிகழ்ச்சியில் சொல்லிவிட்டு இறந்து போகிறார் அழகர். 'இறந்தவன் எப்படி கொல்ல முடியும்' என்பதை விசாரிக்க வருகிறார் காவல் அதிகாரி நம்பி; கொலைகளைத் தடுக்க நம்பியின் மூளை செயல்படும்விதம் காணும் ஆர்வத்தை தருகிறது முதல் 30 நிமிடம்!
'சிம்ரன்... எனக்கு காக்கி சட்டைதான் முதல் மனைவிங்கிறது உனக்குத் தெரியாதா?' என்கிற 'டெலக்ஸ்' பாண்டியனாக நம்பி இருப்பதால், விவாகரத்து கோரும் அளவுக்கு இவர் மீது மனைவிக்கு அதிருப்தி! 'இந்நிலையிலும் நம்பியின் மூளை 'கொலைகளை தடுப்பது எப்படி' என்றே சிந்திக்கிறது' என்று இயக்குனர் 'பில்டப்' ஏற்றுகிறார்!
ஆனால், கதையில் நம்பியின் மூளை துலக்கிய முக்கியமான துப்பு, 'அந்த வீடியோவை ஜூம் பண்ணுங்க' என்று சொல்லி கண்டுபிடித்த ஒற்றை டைரி மட்டுமே; கொலையாகும் நபர்களுக்கு இடையிலான ஒற்றுமையை கண்டு பிடித்தாலும் அதை வைத்து அவர் எந்த திருப்பத்தையும் ஏற்படுத்தவில்லை!
இறுதியில் இறந்தவர்களை வைத்து ஒப்பேற்றி இருக்கும் சமூக கருத்தானது, 'ரீல்ஸ்' வீடியோவுக்கு சிறப்பானதாக இருக்கலாம்; 'த்ரில்லர்' களத்துக்கு அந்நியமாக இருக்கிறது. சிறந்த இயக்குனர்களின் தேவைகளை ஆய்வு செய்து, அவர்கள் நடிகர்களாக மாறாமல் தடுக்க ஆணையம் அமைக்க வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறார் அழகராக வரும் செல்வராகவன்!
'இப்படியான குற்றத்தை விசாரிக்கையில் என்னென்ன நடைமுறைகள் இருக்கும்; எதெல்லாம் சாத்தியம்' என்பதில் கோட்டை விட்டிருக்கிறார் இயக்குனர். தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவான பெயர் பட்டியலால் மட்டுமே வழக்கில் திருப்பம் ஏற்பட்டது எனில், நம்பியின் மூளை இக்களத்தில் சாதித்தது என்ன?
ஆக...
'இது ராட்சசன் இல்லை' என்ற விஷ்ணு விஷால் அவர்களே... உங்கள் நேர்மைக்கு பாராட்டுகள்!

