
'அவன் பொருளை எடுத்து அவனையே போடுவது' - இதுதான் ஆப்பரேஷன் துரந்தர்!
கடந்த 1999ல், 'இந்தியன் ஏர்லைன்ஸ்' விமான கடத்தல் சம்பவத்திற்குப் பின், இந்திய உளவுத்துறை இயக்குநர் அஜய் சன்யால் ஒரு திட்டம் வகுக்கிறார். பாகிஸ்தானில் தீவிரவாதிகளுக்கு பணமும் ஆயுதமும் கிடைக்கச் செய்யும் உள்நாட்டு கும்பலுக்குள் இந்திய உளவாளியை ஊடுருவச் செய்வதே அத்திட்டம்!
பாகிஸ்தான் அரசியல் கட்சிகள், உள்ளூர் தாதாக்கள், தனி நாடு கோரும் பலுசிஸ்தான் மாகாணத்தினர், தொழிலதிபர்கள் இணைந்த மாபெரும் சங்கிலியின் கண்ணிகளை வைத்தே 210 நிமிட திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. வி.எப்.எக்ஸ்., பயன்பாடு, 2000ம் ஆண்டு ஹிந்தி பாடல்களின் ரீமேக், சாகச உணர்வைத் தரும் ஒளிப்பதிவு ஆகியவை நீளமான திரைக்கதையை அயர்ச்சியின்றி பரிமாறுகின்றன!
பிடிபடும் உளவாளிகளை கொடூரமாக சித்ரவதை செய்வது, துரோகிகளை அடித்துக் கொல்வது என வன்முறையை ரத்தமும் சதையுமாக காட்டும் இடங்கள் தலைசுற்ற வைக்கின்றன. 'இக்கதையில் எல்லாமே கற்பனை' என்று துவக்கத்தில் அறிவித்துவிட்டு, 2008 மும்பை தாக்குதல், பார்லிமென்ட் தாக்குதல் சம்பந்தப்பட்ட நிஜ காட்சிகளை பயன்படுத்தியது ஏனோ?
வலுவான அரசு இல்லாத சூழலில் உளவுத்துறை ஊனமுற்று போவதற்கான சாத்தியங்களை விளக்குவது மற்றும் கள்ள ரூபாய் நோட்டுக்கள் தேச பாதுகாப்பிற்கான புற்றுநோய் என்பதை உணர்த்தும் இடங்கள் சாமானிய மக்களுக்கும் தீவிரவாத ஒழிப்பில் இருக்கும் பங்கை சொல்கின்றன.
இந்திய உளவாளியாக வரும் ரன்வீர் சிங்கிற்கு தெய்வத் திருமகள் சாரா அர்ஜுன் ஜோடி என்பதையும், தீவிரவாத அமைப்பின் இயக்கமுறை பற்றிய நீ...ண்ட வகுப்பையும் ஏற்றுக்கொண்டால் இது செம ஆக் ஷன் படம்.
ஆக...
இப்படத்தை ரசிக்கும் தமிழ் ரசிகனுக்கு, 'நம்ம விஜயகாந்த் இல்லையே' எனும் ஏக்கம் நிச்சயம் எழும்!

