
வாழ்க்கை - காதல்; எது பெரிது?
'வாழ்க்கை - காதல்' இடையிலான வித்தியாசத்தை விளங்கிக் கொள்வது, சுய அடையாள தேடலால் குழம்பியுள்ள சத்யாவுக்கு பிரச்னை. விஜியுடன் நேரம் செலவிட்டு அவளை காதலிப்பதில் நிறைவு காணும் அவனிடம், 'உன் வாழ்வின் வெற்றி நான் அல்ல' என்கிறாள் அவள். காதலை இழந்து தன் அடையாளம் தேடும் அவன் கண்டடைவது எதை?
'பல எதிர்ப்புகளை கடந்து காதலர்கள் எப்படி இணைந்தனர்' வகையிலான காதல் கதைகள் பல உண்டு. 'சத்யா - விஜி இணைந்தார்களா, இல்லையா' என்பதை 'க்ளைமாக்ஸ்' ஆக கொண்டிருப்பினும், 'காதலைக் காட்டிலும் வாழ்க்கையின் யதார்த்தம் முக்கியம்' எனச் சொல்கிறது கதை!
'வாழ்வின் பயணத்தில் ஒவ்வொரு மனதிலும் காதல், காமம், அன்பால் நிரம்பிய பாத்திரங்கள் உண்டெனினும், இவற்றை தாண்டி முக்கிய மானது... சுயம் அறிதல். இதை நிரப்பத் தவறினால் அனைத்து உறவுகளிலும் பாதிப்பு ஏற்படும்' என்று சொல்லும் வரை திரைக்கதை வித்தியாசமாகவே பயணிக்கிறது. ஆனால், சுயம் அறிதலுக்கான வழியாக ஏரியை துார்வாருவது எல்லாம் துாங்க வைக்கின்றன!
'ஹிந்தி திணிப்புக்கு தான் எதிர்ப்பு' என்கிற வசனம், சத்யாவுக்கு உதவும் கல்லுாரி மாணவி பாத்திரம், விநாயகர் சிலையை ஏரியில் கரைக்க வரும் கூட்டம் என, கதையில் திணிக்கப்பட்ட விஷயங்களால் வெறுப்பேற்றுகிறார் இயக்குனர் ரத்னகுமார்.
சத்யா தன் காதலை விஜியிடம் சொல்லும் கடற்கரை காட்சியிலும், வெண்சட்டை அணிந்தவனை மருதாணி பூசிய கரங்களால் அணைத்து, பின் அச்சட்டை அணிந்து விஜி பேசுகையிலும் பனிக்கட்டியை அள்ளிவந்து நம் மீது கொட்டுகிறது ரத்னகுமாரின் எழுத்து.
'இதுவொரு மென்மையான படம்' என்பதை உணர்த்துகிறது ஷான் ரோல்டனின் இசை. திரைக்கதையை கவனமாய் இழைத்து சிறப்பாக இயக்கியும் இருந்தால் நாம் 'விசில்' அடித்திருக்கலாம்.
ஆக...
கதை அழைக்கிறதோ இல்லையோ நாயகி ப்ரீத்தி அஸ்ரானி இரண்டாம் முறை பார்க்க வைப்பார்.

