/
ஸ்பெஷல்
/
அறிந்துகொள்வோம்
/
அணைகள், நீர்த்தேக்கங்கள், தடுப்பணைகள் வித்தியாசமென்ன?
/
அணைகள், நீர்த்தேக்கங்கள், தடுப்பணைகள் வித்தியாசமென்ன?
அணைகள், நீர்த்தேக்கங்கள், தடுப்பணைகள் வித்தியாசமென்ன?
அணைகள், நீர்த்தேக்கங்கள், தடுப்பணைகள் வித்தியாசமென்ன?
UPDATED : அக் 03, 2023 04:03 PM
ADDED : அக் 03, 2023 04:00 PM

காவிரி நீர்ப்பங்கீட்டுப் பிரச்னை தமிழகம்-கர்நாடக மாநிலங்களிடையே மீண்டும் சூடுபிடித்துள்ள நிலையில் தற்போது இரு மாநில அரசியல் வட்டாரங்கள் கருத்து மோதலில் ஈடுபட்டு வருகின்றன. காவிரி ஆற்றின் இடையே கேஆர்எஸ், கபினி உள்ளிட்ட 13 பெரிய அணைகள் கட்டி நீர் தேக்கிவரும் கர்நாடகா, தங்கள் விவசாயத்துக்கே தண்ணீர் போதவில்லை எனக் கூறி வருகிறது.
காவிரி நடுவர் மன்றம் இதுகுறித்து இரு மாநில அரசியல் தலைவர்களின் வாதங்களைக் கேட்டு வருகிறது. தமிழகத்தின் மிகப்பெரிய அணையான மேட்டூர் அணை, டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கடந்த 90 ஆண்டுகளாகக் காத்துவருகிறது. மனிதனின் பிரம்மாண்ட படைப்புகளுள் ஒன்றான அணைகள், நீர்த் தேக்க ஏரிகள், சிறிய தடுப்பணைகள் குறித்த சுவாரஸ்யத் தகவல்களைத் தெரிந்துகொள்வோமா?
![]() |
ஓடும் நீரைத் தடுத்து ஒரே இடத்தில் தேக்கிவைக்க பிரம்மாண்ட அணைகளை மனிதன் காலாகாலமாகப் பயன்படுத்தி வருகிறான். மழைக்காலத்தில் மலையின் உச்சியில் உற்பத்தியாகும் ஆறு, அருவியாக கீழே கொட்டி ஆறாக பெருக்கெடுத்து ஓடி, இறுதியில் கடலில் கலந்துவிடுகிறது. இந்த ஓடும் ஆற்றின் இடையே மதகுகள் வைத்து அணைகள் கட்டப்படுகின்றன.
![]() |
அணைகள் மூலமாக பலவித நன்மைகள் உண்டு. அணைகள் மூலமாக ஆற்று நீர் ஓரிடத்தில் தேக்கப்படுகிறது. ஒரே ஆற்றில் பல அணைகள் அடுத்தடுத்து கட்டப்படுவதால் திடீர் வெள்ளம் தடுக்கப்படுகிறது.
![]() |
அணைகளால் நீர் தடுத்து நிறுத்தப்பட்டு ஏரி போன்ற பெரிய நீர்த்தேக்கம் (reservoir) உருவாக்கப்படும். இதில் மீன்களின் இனப்பெருக்கம் அதிகரிப்பதால் மீன் பிடித்தொழில் லாபகரமாக இயங்கும்.
அணையில் இருந்து வெளியே விடப்படும் தண்ணீரின் ஆற்றலால் மின்சாரம் எடுக்கப்படுகிறது. அணைகளின் உள்ளே துளை வழியாக அதிவேகத்தில் ஆற்று நீர் திறக்கப்படுகிறது. நீரின் அழுத்தம் காரணமாக அணைக்குள் பொருத்தப்பட்டுள்ள டர்பைன் சுழலத் துவங்கும். இதன்மூலம் கிடைக்கும் ஆற்றல் கொண்டு மின்சாரம் தயாராகிறது. அணைகள் மூலம் நமக்கு ஆண்டுக்கு பல ஆயிரம் மெகாவாட் இலவச மின்சாரம் கிடைக்கிறது. காற்றாலை, சூரிய ஒளி மூலம் கிடைக்கும் இயற்கை மின்சாரத்தைக் காட்டிலும் அணைகள் மூலம் கிடைக்கும் மின்சாரம் அதிகம்.
![]() |
அணைகளின் நீர்த்தேக்கப் பகுதியில் தேக்கப்படும் நீர் கொண்டு அருகில் உள்ள விவசாய நிலங்கள் செழிப்படைகின்றன. கோடை காலத்தில் பயிர்கள் வளர அணை நீர் உதவுகிறது. வீணாகக் கடலில் கலக்கும் ஆற்று நீர் இவ்வாறு சேமிக்கப்படுவதால் விவசாயிகள் பலர் அனைத்து காலநிலையிலும் பலனடைகின்றனர்.
![]() |
அணை வேறு தடுப்பணை வேறு. சிறிய தடுப்பணைகள் (check dams) ஆற்றுப்படுகை மணல் அரிப்பைத் தடுக்க கட்டப்படுகின்றன. நிலத்தடி நீரை அதிகரிக்கவும் இவை உதவுகின்றன. ஓடும் ஆற்றினிடையே சிறிய தடுப்பணை கட்டிவிட்டால் ஆற்றுநீர் அதன் மீதேறி ஓடும். இவ்வாறு தொடர்ந்து நீர் ஓடினால், தடுப்பணைகளின் உதவியுடன் ஆற்றுமணல் படுக்கை பாதுகாக்கப்படும். தடுப்பணைகள் சில, தற்காலிகமாகவும் கட்டப்படுகின்றன. கற்கள் கொண்டு வெறும் இரண்டாயிரம் ரூபாயில் ஒரு சிறு தடுப்பணையை சிறு ஓடையின் குறுக்கே கட்டிவிடலாம். ஆற்றின் அகலத்தைப் பொருத்து பெரிய தடுப்பணைகளும் கட்டப்படுவதுண்டு.