/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
டிரெண்ட்ஸ்
/
பந்த் நடத்தி வாங்கிக் கட்டிக்கொண்ட கன்னட அமைப்புகள்!
/
பந்த் நடத்தி வாங்கிக் கட்டிக்கொண்ட கன்னட அமைப்புகள்!
பந்த் நடத்தி வாங்கிக் கட்டிக்கொண்ட கன்னட அமைப்புகள்!
பந்த் நடத்தி வாங்கிக் கட்டிக்கொண்ட கன்னட அமைப்புகள்!
UPDATED : செப் 28, 2023 04:56 PM
ADDED : செப் 28, 2023 01:43 PM

காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்ட நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்புகள் பெங்களூருவில் செவ்வாயன்று பந்த நடத்தின. இதனால் புதனன்று நகரம் ஸ்தம்பித்தது. ஒரு கிலோ மீட்டரை கடக்க 2 மணி நேரம் கூட ஆனது. இதனால் பெங்களூருவாசிகள் கன்னட அமைப்புகளை திட்டித் தீர்க்கின்றனர்.
காவிரி விவகாரத்தை அரசியல் பிரச்னையாக்கி குளிர்காய்வதை கர்நாடக மற்றும் தமிழக கட்சிகள் வாடிக்கையாக வைத்துள்ளன. காவிரியிலிருந்து உரிய நேரத்தில் குறுவை சாகுபடிக்கு நீர் திறக்காததால் நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகளின் பல ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் வாடி வதங்கின. செப்டம்பரில் சம்பா சாகுபடிக்கு விவசாயிகள் தயாராகலாம் என்றிருந்த நிலையில், கர்நாடகா தண்ணீர் திறக்காமல் அரசியல் செய்து வருகிறது. இதனால் காவிரி கடைமடை விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக அரசின் அழுத்தம் காரணமாக காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு 15 நாட்களுக்கு வினாடிக்கு 3000 கன அடி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்புகள், விவசாய சங்கங்கள் பெங்களூருவில் பந்த் அறிவித்தன. பா.ஜ.க., மதசார்பற்ற ஜனதா தளம் போன்ற எதிர்கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. இதனால் செவ்வாயன்று பெங்களூருவில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
![]() |
பள்ளிகளில் காலாண்டு தேர்வுகள் முடிந்து அக்டோபர் 2 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வெள்ளியன்றும் பெங்களூரு உட்பட கர்நாடகா முழுவதும் பந்த் அறிவித்துள்ளனர். இதனால் புதனன்றே பலரும் நகரை விட்டு வெளியேறினர். ஒரே சமயத்தில் பலரும் புறப்பட்டதால் பெங்களூரு வெளிவட்டச் சாலை புதனன்று மாலை மூன்றரை லட்சம் வாகனங்களால் திக்குமுக்காடியது. 15 கிலோமீட்டரை கடக்க 4 மணி நேரம் ஆனது.
இப்பகுதிகளில் ஐடி நிறுவனங்கள் பல உள்ளன. 10 லட்சம் ஊழியர்கள் வந்து செல்லும் பகுதி. செவ்வாயன்று வேலை பாதிக்கப்பட்டதால் அவர்களில் பலரும் புதனன்று அலுவலகம் வந்துள்ளனர். அதனாலும் போக்குவரத்து நெரிசல் உண்டானதாக கூறப்படுகிறது. வழக்கத்தை விட இரு மடங்காக வாகனங்கள் எண்ணிக்கை கூடியதால் நகரே மூச்சு விட திணறியது. போக்குவரத்து நெரிசலில் சிக்கியவர்கள் சமூக வலைதளங்களில் பந்த் அறிவித்த கன்னட அமைப்புகளையும், ஆளும் காங்கிரஸ் அரசையும் திட்டித் தீர்த்தனர்.