ADDED : ஜூலை 22, 2026 11:22 PM

- நமது நிருபர் -: பெங்களூரில் உள்ள முக்கியமான இடங்களை பஸ்சின் மேல்தளத்தில் அமர்ந்தபடி சொகுசாக பார்க்கலாம். சொகுசு என்றவுடன் அதிக செலவு என பயப்பட வேண்டாம். வெறும், 180 ரூபாயில் பயணம் செய்யலாம்.
இந்த சிறப்பான சேவையை கர்நாடக மாநில சுற்றுலா மேம்பாட்டு கழகமே வழங்குகிறது. இதற்கு 'அம்பாரி பயணம்' என பெயர். அம்பாரி என்றால் யானை மீது அமர்ந்து பயணிப்பது என பொருள்.
அதாவது, இரு தளங்களுடைய, 'டபுள் டக்கர் பஸ்'சில் பயணம் செய்யலாம். இந்த பஸ்சின் மேல்தளத்தில் பயணிக்கும் போது யானை மீது அமர்ந்து பயணிப்பது போல் இருக்கும். பஸ்சின் மேல்தளம் திறந்தவெளியில் இருக்கும். மேல்தளத்தில் ஜன்னல், மேற்கூரை எதுவும் கிடையாது. இதனால், அம்பாரி பயணம் என பெயர்.
பசுமை இதயம் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட கட்டடங்களான டவுன் ஹால், மாநகராட்சி அலுவலகம், தென் மாநிலத்தின் தாஜ் மஹால் என்றழைக்கப்படும் விதான் சவுதா, ஆடம்பரத்துக்கு பெயர் போன யு.பி., சிட்டி மால், கர்நாடக உயர் நீதிமன்றம், ஆர்.சி.பி., ரசிகர்களின் புகலிடமான சின்னசாமி ஸ்டேடியம், பெங்களூரின் பசுமை இதயம் என்றழைக்கப்படும் கப்பன் பூங்கா, அறிவு பெட்டகமான விஸ்வேஸ்வரய்யா அறிவியல் அருங்காட்சியகம் ஆகியவற்றை பார்த்து மகிழலாம்.
இந்த அனைத்து இடங்களையும் ஒரு மணி நேரத்தில் பார்த்து ரசிக்கலாம். குறிப்பாக, விதான் சவுதா முன்பு ஓரிரு நிமிடங்கள் பஸ் நிற்கும். இந்த சமயத்தில் படங்கள், வீடியோ எடுத்து மகிழலாம். இந்த மொத்த இடங்களையும் சொந்த வாகனங்களில் சென்று பார்ப்பது கடினமான காரியம். இதனாலே, டபுள் டக்கர் பஸ்சில் தாராளமாக பயணிக்கலாம்.
180 ரூபாய் இந்த பஸ்சில் டிக்கெட் முன்பதிவு செய்ய 'www.ks tdc.co' இணையதளத்தில், 'hop-on hop off service' இணைய பக்கத்திற்குள் சென்று டிக்கெட் முன்பதிவு செய்யலாம். பெயர், வயது, இ - மெயில் முகவரி போன்றவற்றை உள்ளிட வேண்டும். ஒரு டிக்கெட் 180 ரூபாய். இதற்கான பணத்தை செலுத்தியவுடன், டிக்கெட் இ - மெயிலில் வந்து சேரும்.
பஸ்சின் மேல்தளத்தில் பயணிக்க குறிப்பிட்டு டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும். அப்போது, தான் திறந்தவெளியில் அனைத்து இடங்களையும் உற்சாகமாக பயணத்தை ரசிக்க முடியும்.
