/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
சுற்றுலா
/
திக்கு தெரியாத காட்டில் புலியை தேடி ஒரு சபாரி
/
திக்கு தெரியாத காட்டில் புலியை தேடி ஒரு சபாரி
ADDED : ஆக 07, 2025 05:41 AM

காட்டிற்குள் ஜீப்பில் பயணம் செய்து, புலியை தேடி அலையும்போது நம் இதய துடிப்பு எப்படி இருக்கும்? புலி நம்மை பார்த்து விடுமா, ஏதாவது செய்துவிடுமா என்ற எண்ண ஓட்டங்களுடன், அடர்ந்த காட்டில், விலங்குகளின் சத்தத்துடன் பயணம் செய்வது, எப்படி இருக்கும் என யோசித்து பாருங்கள்.
இது போன்ற அனுபவத்தை நீங்களும் பெற விரும்பினாலோ, தங்கள் இதய துடிப்பை அளந்து பார்க்க விரும்பினாலோ, நீங்கள் செல்ல வேண்டிய இடம் 'பண்டிப்பூர் சபாரி'.
சாம்ராஜ்நகர், குண்டுலுபேட் தாலுகாவில் உள்ளது பண்டிப்பூர் தேசிய பூங்கா. 1,024 ஏக்கரில் பாதுகாக்கப்பட்ட புலிகளின் சரணாலயமாக விளங்குகிறது. இந்த வனப்பகுதியில் 191 புலிகளுடன், 1,116 யானைகள், பல வகை மான்கள், காட்டெருமைகள், மயில் உட்பட 200க்கும் மேற்பட்ட பறவை இனங்களும் வசித்து வருகின்றன.
இந்த வனப்பகுதிக்குள் பயணம் செய்வதற்கு வாகனங்களுக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்படும். வனப்பகுதிக்குள் நுழைந்ததும், நம்மால் பல எச்சரிக்கை பலகைகளை பார்க்க முடியும்.
அறிவுறுத்தல் விலங்குகளுக்கு உணவு அளிக்கக் கூடாது; எங்கும் வாகனங்களை நிறுத்த கூடாது; புகைப்படங்கள் எடுக்கக்கூடாது; பிளாஸ்டிக் பொருட்களை துாக்கி வீசக்கூடாது என, பல அறிவுறுத்தல்கள் இருக்கும். இதை மீறினால் வன சட்டம் 1971ன் படி தண்டனை வழங்கப்படும்.
இந்த அனைத்து விதிகளையும் கடைபிடித்து, வாகனத்தை பொறுமையாக பண்டிப்பூர் தேசிய பூங்கா நோக்கி ஓட்டிச்செல்லும் வழியிலேயே, மான்கள் கூட்டம் கூட்டமாக சாலையின் ஓரத்தில் மேய்ந்து கொண்டிருப்பதை பார்க்க முடியும். ஆடுகள் கூட்டம் கூட்டமாக மேய்வது போல, புள்ளி மான்கள் மேய்ந்து கொண்டிருக்கும். அவற்றின் அழகை ரசித்தபடியே, தொந்தரவு செய்யாமல் வாகனத்தில் சென்று கொண்டே இருக்கலாம்.
அதே சமயத்தில், சில காட்டு யானைகளையும் பார்க்கலாம். யானைகள் அமைதியாக மரத்தடி நிழலில் நின்று கொண்டு இருப்பதை காணலாம். அதை பார்த்து அசந்து விட வேண்டாம், 'இது சும்மா டிரெய்லர் தான். மெயின் பிக்சர் இனிமேல் தான்' என்பது போல, பண்டிப்பூரில் உள்ள 'ஜங்கிள் சபாரியில்' தான் கிளைமாக்ஸ் போன்று, அத்தனை சுவாரஸ்யம் உள்ளது.
தனி மவுசு கர்நாடகாவில் பல இடங்களில் சபாரிகள் இருந்தாலும், பண்டிப்பூர் சபாரிக்கு எப்போதும் தனி மவுசு தான். இதற்கு காரணம், மைசூரு, பன்னரகட்டாவில் உள்ள சபாரிகள் வனவிலங்கு சரணாலயத்திற்குள் மேற்கொள்ளப்படுபவை. ஆனால், பண்டிப்பூரிலோ காட்டிற்குள் வன விலங்குகளின் இருப்பிடத்திற்குள்ளே சென்று பார்க்கலாம்.
சபாரி துவங்கியதும் சேறும், சகதியுமான மணல் பாதையில், பறவை, விலங்குகள் சத்தம் மட்டுமே கேட்கும் வனப்பகுதிக்குள் அழைத்துச் செல்வர். குலுங்கி, குலுங்கிச் செல்லும் வாகனத்தில் செல்வதற்கே அருமையாக இருக்கும். ஒவ்வொரு வாகனத்திலும் வழிகாட்டியும் இருப்பார்.
அவர், சபாரி துவங்குவதற்கு முன்னரே, பயணத்தின்போது செய்ய கூடாதவை பற்றி எடுத்துரைப்பார். இதை அனைவரும் கட்டாயம் கடைபிடித்து ஆக வேண்டும். ஒவ்வொரு விலங்குகளின் குணம், அவை உண்ணும் உணவு ஆகியவை குறித்து, விளக்கமாக கூறுவார். மேலும் முக்கியமாக, விலங்குகளை பார்த்தால் 'சத்தம் போடக்கூடாது' என்பது முக்கிய விதியாகும்.
சாம்பல் மான் இந்த சபாரியின்போது, புள்ளி மான், சாம்பல் மான்கள், காட்டு யானைகள், மயில், பறவைகளை எளிதில் பார்க்க முடியும். ஆனால், சபாரியின் நிஜ ஹீரோவான புலியை பார்ப்பது எளிதான காரியமல்ல. அதிர்ஷ்டம் இருந்தால் மட்டுமே புலியை பார்க்க முடியும். ஏனெனில், புலிகள் அடர்ந்த வனப்பகுதிக்குள் இருக்கும். அவை, தண்ணீர் குடிப்பதற்காக மட்டுமே வெளியே வரும். அது போன்ற ஒரு சமயத்தில் புலியை பார்த்தால் மட்டுமே உண்டு.
புலியை பார்ப்பதற்காக வாகனத்தில் இருக்கும் அனைவரும் ஆர்வத்துடன் இருப்பது உறுதி. இதுகுறித்து வழிகாட்டி கூறும் பஞ்ச் டயலாக், 'நாம் நினைத்தால் புலியை பார்க்க முடியாது. புலி நினைத்தால் மட்டுமே நம்மால் பார்க்க முடியும்' என, சபாரியின் துவக்கத்திலே கூறி விடுவார்.
ஆன்லைன் காலை 6:30 மணி முதல் 10:30 மணி வரை, மதியம் 2:30 மணி முதல் மாலை 6:30 மணி வரை மட்டுமே இந்த சபாரியில் செல்ல முடியும். பஸ், ஜிப்சி, கேம்பர் என மூன்று வகைகளில் சுற்றுலா பயணியர் அழைத்துச் செல்லப்படுகி ன்றனர். பஸ்சில் செல்ல 90 நிமிடத்துக்கு ஒரு நபருக்கு 650 ரூபாயும்; ஜிப்சி மற்றும் கேம்பர் எனும் பெரிய அளவிலான கார் போன்ற வாகனத்தில் செல்ல 120 நிமிடங்களுக்கு ஒரு நபருக்கு 1,100 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
கேம்பர், ஜிப்சியில் செல்வதற்கு குடும்பத்துடன் வருபவர்களுக்கே முன்னிரிமை அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கட்டணம் கிடையாது. 5 - 12 வயது குழந்தைகளுக்கு பாதி கட்டணம் வசூலிக்கப்படும். டி.எஸ்.எல்.ஆர்., கேமராவிற்கு கூடுதல் கட்டணம் உண்டு.
சபாரியில் செல்வதற்கு பண்டிப்பூர் தேசிய பூங்கா இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்வது நல்லது. முன்பதிவின்போது, அங்கீகரிக்கப்பட்ட இணையதளமா என்பதையும் சரிபார்த்துக் கொள்ளவும்.
நேரில் சென்று சபாரிக்கு டிக்கெட் வாங்கும்போது, சபாரி துவங்கும் அரைமணி நேரத்திற்கு முன்கூட்டியே செல்ல வேண்டும். அதுமட்டுமின்றி நேரில் சென்று டிக்கெட் வாங்கும்போது, ஜிப்சி, கேம்பர் வாகனங்களுக்கு டிக்கெட் கிடைப்பது மிக கடினம். எனவே, இணையத்தில் முன்பதிவு செய்து கொள்வது சிறப்பு.
சொந்த
வாகனம்
பொது போக்குவரத்தில் செல்வதை தவிர்க்கவும். சொந்த வாகனங்களில் செல்வது சிறப்பு. அப்போது தான் போகும் வழியில் பல மிருகங்களை நிதானமாக பார்த்து ரசிக்கலாம். பண்டிப்பூர் தேசிய பூங்கா மைசூரு அரண்மனையில் இருந்து 85 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது. அருகில் உள்ள சுற்றுலா தலம் - ஊட்டி, மசினகுடி சபாரி, தெப்பக்காடு யானைகள் முகாம். தொடர்புக்கு - 93107 41677
- நமது நிருபர் -