ADDED : நவ 01, 2024 11:05 PM

தேங்காய் பாலில் கோழி குழம்பு எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
அரை கிலோ கோழி கறி
ஒரு கப் நறுக்கிய சின்ன வெங்காயம்
இரண்டு தக்காளி
மூன்று பச்சை மிளகாய்
ஒரு காய்ந்த மிளகாய்
கறிவேப்பிலை ஒரு கொத்து
3 டீஸ்பூன் சிக்கன் துாள்
ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள்
அரை டீஸ்பூன் கடுகு
ஒரு கப் தேங்காய் பால்
உப்பு, எண்ணெய் தேவையான அளவு
செய்முறை:
கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை போட்டு நன்கு தாளித்து கொள்ளவும்.
பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கிய பின், தக்காளியை சேர்த்து மீண்டும் நன்றாக வதக்கி கொள்ளவும்.
தக்காளி வதங்கிய பின் கோழிக்கறியை சேர்த்து ஐந்து நிமிடங்களுக்கு நன்றாக வதக்க வேண்டும். தேவையான அளவு உப்பு, சிக்கன் மசாலா பொடி சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக வேக வைக்கவும்.
கறி முக்கால் பதத்திற்கு வெந்ததும் தேங்காய் பால் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். பத்து நிமிடத்திற்கு பின் குழம்பு பதத்திற்கு வந்தபின் அடுப்பை 'ஆப்' செய்யவும். தேங்காய் பால் கோழி குழம்பு ரெடி.