/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
உணவு
/
குழந்தைகளை ஈர்க்கும் பிரட் ஜாமூன்
/
குழந்தைகளை ஈர்க்கும் பிரட் ஜாமூன்
ADDED : அக் 25, 2024 09:34 PM

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இனிப்புக்கு அடிமை ஆகாதவர்களே இல்லை. சர்க்கரை நோயாளிகள் கூட யாருக்கும் தெரியாமல் குழந்தை தனமாக இனிப்பு சாப்பிடுவர். இனிப்பு வகையில் குலோப் ஜாமூன் பிடிக்காதவர்களே இல்லை.
மைதா மாவில் குலோப் ஜாமூன் அதிகம் செய்யப்படுகிறது. ஆனால் மைதா உடலுக்கு கெட்டது என்றும் சொல்வர். மைதா பயன்படுத்தாமல் பிரட்டை வைத்தும் சூப்பரான குலோப் ஜாமூன் செய்யலாம். எப்படி செய்வது என பார்ப்போம்.
தேவையான அளவு பிரட், பால் பவுடர் ஒரு டீஸ்பூன், பால் தேவைப்படும் அளவு எடுத்து கொள்ள வேண்டும். பிரட்களை சிறு, சிறு துண்டுகளாக வெட்டி, மிக்சியில் போட்டு பவுடர் போல அரைத்து கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் அரைத்த பிரட் பவுடரை போட்டு, பால் பவுடர், பாலை ஊற்றி மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும். பிசைந்த மாவை சிறு, சிறு உருண்டைகளாக உருட்டி ஒரு தட்டில் தனியாக வைத்து கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து, பொரிப்பதற்கு ஏற்ற அளவு தேவையான எண்ணெய் அல்லது நெய் ஊற்றி சூடேற்ற வேண்டும். உருட்டி வைத்துள்ள உருண்டைகளை பொன்னிறமாக பொரித்து தனியாக எடுத்து வைக்க வேண்டும். அதற்குள் ஒரு கப் சர்க்கரை, இரண்டு கப் தண்ணீர், எலுமிச்சை சாறு ஒரு டீஸ்பூன், ஏலக்காய் பவுடர் கால் டீஸ்பூன், குங்கும பூ தேவையான அளவு எடுத்து, சர்க்கரை பாகு தயாரித்து கொள்ளுங்கள்.
பொன்னிறமாக பொரித்த உருண்டையை, சர்க்கரை பாகுவில் போட்டு விடுங்கள். ஒரு பாத்திரத்தை போட்டு மூடி, ஒரு மணி நேரம் கழித்து திறந்து பார்த்தால், சுவையான பிரட் ஜாமூன் தயார். பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் குழந்தைகள், பிரட் ஜாமூனை சாப்பிட்டு மகிழ்ச்சி அடைவர். 'அம்மா மீண்டும் ஒரு முறை செய்து கொடுங்கள்' என்று, அன்பு தொல்லையும் கொடுப்பர்.