/
ஸ்பெஷல்
/
பானுவாசர ஸ்பெஷல்
/
பால் உற்பத்தியில் சாதிக்கு ம் இளைஞர்
/
பால் உற்பத்தியில் சாதிக்கு ம் இளைஞர்
ADDED : டிச 21, 2025 05:14 AM

ஓரளவு படித்த இளைஞர்களே, அதிக சம்பளம் கிடைக்கும் வேலையை தேடுகின்றனர். பிடித்தமான வேலை கிடைக்கவில்லை என, புலம்பியபடி பலர் ஊரை சுற்றுகின்றனர். ஆனால், சிலர் வேலையை தேடி காலம் கடத்தாமல், சுய தொழில் செய்து முன்னேறுகின்றனர். அப்படிப்பட்டவர்களில் ஹேமந்த்தும் ஒருவர்.
பொதுவாக கிராமத்து இளைஞர்கள், சொந்த ஊரில் நிலம் இருந்தாலும், விவசாயத்தில் ஆர்வம் காட்டுவது இல்லை. நகர்ப்புறங்களுக்கு வந்து ஹோட்டல், தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் என, கிடைத்த வேலைக்கு செல்கின்றனர். நகரிலேயே நிரந்தரமாக செட்டில் ஆகியும் விடுகின்றனர்.
மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு தாலுகாவின், சித்தய்யனஹுன்டி கிராமத்தில் வசிப்பவர் ஹேமந்த், 20. பி.யு.சி., வரை படித்துள்ளார். ஓரளவு படித்திருந்தாலும், இவர் பெற்றோரை விட்டு விட்டு, பிழைப்பு தேடி நகருக்கு செல்ல விரும்பவில்லை. தன் சொந்த ஊரிலேயே பிழைக்க வேண்டும் என, முடிவு செய்தார். என்ன செய்வது என, ஆலோசித்து பால் உற்பத்தியில் ஈடுபட்டார்.
பசுக்கள் வளர்ப்பில் அனுபவம் இல்லாததால், ஆரம்ப நாட்களில் தொந்தரவை அனுபவித்தார். அதன்பின், மற்ற விவசாயிகளிடம் பசுக்கள் பராமரிப்பு, தீவனம் அளிப்பது, பசுக்களை நோய் தாக்காமல் பார்த்து கொள்வது என, அனைத்தையும் கற்றுக்கொண்டார். பால் விற்பனையிலும் பிரச்னை ஏற்பட்டது. பல பிரச்னைகளை சமாளித்து, தொடர்ந்து பால் உற்பத்தியில் ஈடுபட்டார். இப்போது லாபகரமான தொழிலாக மாற்றியுள்ளார்.
பால் உற்பத்தியில், அவருக்கு நிலையான வருவாய் கிடைக்கிறது. பசுக்களின் சாணம், கோமியத்தை பயன்படுத்தி இயற்கை உரம் தயாரிக்கிறார். இது, விவசாய பயிர்களுக்கு பயன்படுகிறது. வெளியே இருந்து உரம் வாங்கும் செலவும் குறைகிறது. கிராமத்தில் இவர் கவுரவமாக வாழ்க்கை நடத்த, பால் உற்பத்தி உதவுகிறது. முதலில் இரண்டு பசுக்களுடன், தொழிலை துவக்கினார். படிப்படியாக ஒவ்வொரு பசுவாக வாங்கினார். தற்போது, 14 பசுக்களை வளர்க்கிறார்.
தினமும், 100 லிட்டர் பால் உற்பத்தி செய்கிறார். இரண்டு வாரங்களுக்கு, 52,500 ரூபாய் வீதம், மாதந்தோறும் லட்சக்கணக்கான ரூபாய் சம்பாதிக்கிறார். மகனின் வளர்ச்சியை கண்டு, பெற்றோர் மனம் மகிழ்கன்றனர். நகர்ப்புற இளைஞர்கள் மட்டுமே, லட்சக்கணக்கான ரூபாய் சம்பாதிக்க முடியும். கிராமத்து இளைஞர்களால் எதையும் சாதிக்க முடியாது என்ற கருத்தை, ஹேமந்த் தகர்த்து எரிந்துள்ளார். கிராமத்து இளைஞர்களாலும் சொந்த தொழில் செய்து, வாழ்க்கையில் முன்னேற முடியும் என்பதை செய்து காட்டியுள்ளார். இவர் கிராமத்து இளைஞர்களுக்கு முன் மாதிரியாக திகழ்கிறார்.
- நமது நிருபர் -

