/
ஸ்பெஷல்
/
பானுவாசர ஸ்பெஷல்
/
பாடம் கற்றதும் இங்கே... பாடம் கற்பிப்பதும் இங்கே... பாடம் கற்றதும் பாடம் கற்பிப்பதும் முடிசூடா மன்னன்' பேராசிரியர் கிருஷ்ணகுமார்
/
பாடம் கற்றதும் இங்கே... பாடம் கற்பிப்பதும் இங்கே... பாடம் கற்றதும் பாடம் கற்பிப்பதும் முடிசூடா மன்னன்' பேராசிரியர் கிருஷ்ணகுமார்
பாடம் கற்றதும் இங்கே... பாடம் கற்பிப்பதும் இங்கே... பாடம் கற்றதும் பாடம் கற்பிப்பதும் முடிசூடா மன்னன்' பேராசிரியர் கிருஷ்ணகுமார்
பாடம் கற்றதும் இங்கே... பாடம் கற்பிப்பதும் இங்கே... பாடம் கற்றதும் பாடம் கற்பிப்பதும் முடிசூடா மன்னன்' பேராசிரியர் கிருஷ்ணகுமார்
ADDED : ஜன 04, 2026 04:52 AM

தங்கவயலின் மாரிகுப்பம் பகுதியில், தமிழரான தங்கச்சுரங்க தொழிலாளி சின்னதம்பி- - தவமணி தம்பதி மகனாக 1959 ஜூலை 23ம் தேதி பிறந்தவர், பிற்காலத்தில் பெரிய சாதனைகள் செய்வார் என, அப்போது யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். ஆரம்பப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி என எல்லாமே தமிழில் தான். 1974ல் தங்கவயல் முதல் நிலை கல்லுாரியில் பி.யு.சி., மற்றும் பி.எஸ்.சி., எனும் இளங்கலை அறிவியல் பட்டம், பெங்களூரு சென்ட்ரல் கல்லுாரியில் முதுகலை அறிவியல் பட்டம், ஐ.ஐ.டி.இ.,யில் 6 ஆண்டுகள் பூச்சிக்கொல்லி மருந்தியல் ஆய்வில், 'முனைவர்' பட்டம் என்பதோடு நில்லாமல், எல்.எல்.பி., - எல்.எல்.எம்., என, சட்ட பட்டப்படிப்பையும் முடித்தார்.
தங்கவயல் முதல் நிலை கல்லுாரியில், 1974ல் மாணவராக சேர்ந்த இவர், அதே கல்லுாரியில் பேராசிரியராகவும் பணியாற்றினார். கடந்த 36 ஆண்டுகள் பேராசிரியர் பணியில், ஆறு ஆண்டுகள் கல்லுாரி முதல்வராகவும் இருந்துள்ளார். தற்போது, உச்சநீதிமன்ற வக்கீலாக பணியாற்றி வருகிறார்.
பள்ளி, கல்லுாரியில் படிக்கும் காலத்தில், மொழி பற்று, சமூக சிந்தனையாளராக இருந்தார். கல்லுாரியில் பணியாற்றிய காலத்தில் மாணவர்களுக்கு பாடம் கற்றுத் தரும் வகுப்பு மட்டும் நடத்தாமல், எதிர்காலத்தில் வல்லுநர்களாக திகழ்வது எப்படி என்பதற்கான வழிகாட்டியாகயும் இருந்தார்.
தங்கவயலில், 30 ஆண்டுகளுக்கு முன் சிந்தனையாளர் மன்றம் தொடங்கினார். ஒவ்வொரு மாதமும், தமிழகத்தில் இருந்து தமிழறிஞர்களை வரவழைத்து நிகழ்ச்சிகள் நடத்தி விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டார்.
தமிழ் மொழியின் சிறப்பு, சமூகத்தில் அனைத்து வகையிலும் பின்தங்கிய மக்களின் வாழ்வியல் மேம்பாட்டிற்கான இடஒதுக்கீடு கொள்கை, சமூகத்தில் நிலவும் மூடநம்பிக்கை தகர்ப்பு உள்ளிட்ட தலைப்புகளில் பேசியவர். வளரும் தலைமுறையினர் கல்வியில் சிறந்தோங்க வேண்டும் என்பதே, இவரின் நோக்கமாகும்.
தங்கவயல் தமிழ் சங்கத்தின் புரவலராக தமிழ்ச் சேவை செய்து வருகிறார். தங்கவயலில் பிறந்திருந்தாலும், கர்நாடகா முழுதும் சமூக சிந்தனையாளர்களுக்கு நன்கு அறிமுகமானவர்.
பல்வேறு மாநாடுகள், கருத்தரங்கம், பயிலரங்கம், ஆய்வரங்கங்களில் பங்கேற்று உரையாற்றி வருபவர்.
தமிழ் சார்ந்த எந்த நிகழ்ச்சி நடந்தாலும் தவறாமல் கலந்து கொள்வதுடன் வாய்ப்பு கிடைக்கும் போது, தமிழின் சிறப்பு, தமிழ் இலக்கியத்தின் பெருமைகளை தனது பேச்சு திறன் மூலம் எடுத்துரைத்து வருகிறார்.
கர்நாடகாவில் சிறந்த தமிழ் ஆய்வாளராக உள்ளார் என்பது மறுக்க முடியாத உண்மை.
'கல்விக்கு கரையில்லை... அதற்கு ஈடு இணை எதுவும் இல்லை' என்பதே இவரின் சித்தாந்தம். 66 வயதை கடந்தும் உடற்பயிற்சி, நடைபயிற்சியென உடல் நலம் மீதும் அக்கறை காட்டுபவர்.
'எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு'
'தொட்டனைத் துாறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் துாறும் அறிவு'
என்ற இரு திருக்குறளை, தன் வாழ்நாளில் மாணவர்களுக்கு போதனையாக கற்பித்து வருபவர். இவரிடம் கல்வியில் கம்பீரத்தை காணலாம். ஆனால், அடக்கமே சிறந்த பண்பாளருக்கான முகவரியை தரும் என்பதில் உறுதியாக உள்ளார்.
இவரை தொடர்பு கொள்ள விரும்புவோர், மின்னஞ்சல்:- dr.kk1022@gmail.com; 94497 30798 என்ற மொபைல் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
- நமது நிருபர் -

