/
ஸ்பெஷல்
/
பானுவாசர ஸ்பெஷல்
/
கர்நாடகாவுக்கு பெருமை சேர்த்த 'ஹசே சித்தாரா' சரஸ்வதி
/
கர்நாடகாவுக்கு பெருமை சேர்த்த 'ஹசே சித்தாரா' சரஸ்வதி
கர்நாடகாவுக்கு பெருமை சேர்த்த 'ஹசே சித்தாரா' சரஸ்வதி
கர்நாடகாவுக்கு பெருமை சேர்த்த 'ஹசே சித்தாரா' சரஸ்வதி
ADDED : ஆக 16, 2025 11:24 PM

'ஹசே சித்தாரா' என்பது கர்நாடகாவின் மரபு சார்ந்த ஓவிய கலைகளில் ஒன்றாகும். இது முக்கியமாக திருமண விழாக்கள், விளையாட்டு நிகழ்ச்சிகளில் சுவர்களில், தரைகளிலும் வரையப்படும். இதில், இயற்கை வண்ணங்களை பயன்படுத்தி விலங்குகள், மனிதப் படங்களை வரைவர். இந்த கலை மக்களின் வரலாறு, வாழ்க்கை, பாரம்பரியம் ஆகியவற்றை பரைசாற்றுகிறது. இந்த கலையில் சத்தமில்லாமல், பல சாதனைகளை தம்பதி செய்து வருகின்றனர்.
உத்தர கன்னடா மாவட்டம் சித்தாபுரா தாலுகாவில் உள்ள ஹசவந்தேயாவை சேர்ந்த தம்பதி ஈஸ்வர் நாயக், சரஸ்வதி நாயக். இவர்கள் 'ஹசே சித்தாரா' கலையில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஈஸ்வர் நாயக், தன் மனைவி சரஸ்வதிக்கு ஒரு ஆண்டாக ஓவியம் வரைய பயிற்சி அளித்து வந்தார்.
திருமண நிகழ்ச்சி இதன் பின், சரஸ்வதி சுயமாகவே ஓவியங்கள் வரைய துவங்கினார். இருவரும் சேர்ந்து பல விதமான வண்ணங்களை வைத்து, ஓவியங்கள் வரைந்து வருகின்றனர். இவர்களின் ஓவியங்களுக்கு ஒரு கட்டத்தில் மவுசு அதிகரித்தது. இதனால் அப்பகுதிகளில் நடக்கும் திருமண நிகழ்ச்சிகளுக்கு, அனைவரும் தம்பதியை அழைத்தனர். இவர்களும் கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கொண்டு, ஓவியங்கள் வரைந்து அசத்தினர். திருமணத்திற்கு வரும் பலரும், அவர்கள் திறமையை பார்த்து வாய் பிளந்து நின்றனர். தங்களது ஓவியங்களில் வெள்ளை, சிவப்பு, கருப்பு, மஞ்சள் ஆகிய நான்கு வண்ணங்களையே அதிகமாக பயன்படுத்துகின்றனர்.
இயற்கை வண்ணங்கள் இந்த வண்ணங்களும் செயற்கை நிறமிகளால் தயாரிக்கப்படாமல், இயற்கையான முறையில் தயாரிக்கப்படுகிறது. கடந்த குடியரசு தின விழாவில், பாரம்பரிய கலைகளில் வளர்க்கும் முயற்சியில் ஈடுபடுவதற்காக ஈஸ்வர் நாயக்கிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது; அவரும் கலந்து கொண்டார். இந்நிலையில், நேற்று முன்தினம் புதுடில்லியில் நடந்த சுதந்திர தின விழாவில், பாரம்பரிய கலைகளில் சிறப்பாக செயல்பட்டதற்காக சரஸ்வதி பங்கேற்றார். கர்நாடகாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து கலைஞர்களில் இவரும் ஒருவர் ஆவார்.
இது குறித்து சரஸ்வதி கூறியதாவது:
டில்லியில் நடந்த சுதந்திர தின அணிவகுப்பில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றது, என் வாழ்வில் மறக்க முடியாத தருணம். இதை நினைத்து, நான் அகம் மகிழ்ந்தேன். எனது கணவர் அளித்த பயிற்சி எனக்கு உதவுகிறது.
வீட்டில் ஓவியங்கள் வரைந்து, மற்ற இடங்களுக்கு கொண்டு செல்கிறோம்; விற்பனை செய்கிறோம். வகுப்புகள் கூட நடத்துகிறோம். எங்கள் பாரம்பரிய கலை குறித்து, அனைவரிடமும் பிரசாரம் செய்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -