ADDED : செப் 04, 2025 11:21 PM

சில ஆண்டுகளுக்கு முன், சைக்கிள் தா பெரும்பாலானோருக்கு பிரதான வாகனமாக இருந்தது. அனைத்து இடங்களுக்கும் சைக்கிளில் சென்றனர். ஆனால் தற்போதைய பரபரப்பான காலகட்டத்தில் அலுவலகத்திற்கு கார், பைக்குகளில் செல்ல ஆரம்பித்துவிட்டனர்.
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவது; உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்திருப்பது; தசை மற்றும் எலும்பு பலமாக இருப்பது உட்பட பல நன்மைகள் சைக்கிள் ஓட்டுவதன் மூலம் கிடைக்கிறது. சைக்கிள் ரேஸ் போட்டிகளில், பெங்களூரை சேர்ந்த இளம்பெண் அசத்துகிறார்.
ஏகலவ்யா விருது பெங்களூரின் சேஷாத்ரிபுரத்தை சேர்ந்தவர் கீர்த்தி ரங்கசாமி, 23. பி.காம்., பட்டதாரி. சிறு வயதில் இருந்தே சைக்கிள் ஓட்டுவதில் இவருக்கு அலாதி பிரியம். 10 கி.மீ., துார சைக்கிள் ஓட்டும் போட்டிகளில் பங்கேற்கிறார்.
கடந்த 2019 - 2020ல் தென் கொரியாவில் நடந்த ஜூனியர் ஆசியா டிராக் சைக்கிள் ஓட்டுதல் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியாவை பிரதிநிதித்துவப் படுத்தினார். 2023ல் டில்லியில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 2வது இடம் பிடித்து அசத்தினார். அதே ஆண்டு பஞ்சாப் பாட்டியாலாவில் இந்திய விளையாட்டு ஆணையம் சார்பில் நடந்த கேலோ இந்தியா மகளிர் லீக் டிராக் சைக்கிள் ஓட்டுதல் போட்டியில் ஐந்து தங்க பதக்கங்கள் வென்றார்.
தங்கம், வெள்ளி, வெண்கலம் என, இதுவரை 20க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்று உள்ளார். இவரது திறமையை அங்கீகரிக்கும் வகையில், 2021ல் கர்நாடக அரசு ஏகலவ்யா விருது வழங்கி கவுரவித்தது. கர்நாடக அரசின் அம்ரித் விளையாட்டு தத்தெடுப்பு திட்டத்திலும் அங்கம் வகிக்கிறார்.
கீர்த்தி ரங்கசாமி கூறுகையில், ''என் தந்தை ரங்கசாமி பளுதுாக்கும் வீரர். அவர் நிறைய கோப்பைகளை வென்றுள்ளார். விளையாட்டில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் அவரிடம் இருந்து எனக்கு ஏற்பட்டது. எனது, 5 வயதில் நான் டேபிள் டென்னிஸ் தான் விளையாடினேன்.
''விளையாட்டின் மீது எனக்கு இருந்த ஆர்வம், ஆக்ரோஷத்தை பார்த்து உடலை கட்டுகோப்பாக வைத்திருக்க, சைக்கிளிங் விளையாட்டில் ஈடுபடும்படி தந்தை கூறினார். பின், டேபிள் டென்னிசை விட்டுவிட்டு சைக்கிளிங்கில் ஈடுபட ஆரம்பித்தேன். தங்கம், வெள்ளி, வெண்கலம் என பதக்கம் வென்று உள்ளேன். வரும் நாட்களில் நிறைய பதக்கம் வெல்ல வேண்டும், விளையாட்டில் நிறைய சாதிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது,'' என்றார்
- நமது நிருபர் -.