ஓட்டப்பந்தயத்தில் சாதிக்க துடிக்கும் ஹர்ஷிதா டேட்டர்
ஓட்டப்பந்தயத்தில் சாதிக்க துடிக்கும் ஹர்ஷிதா டேட்டர்
ADDED : ஆக 14, 2025 11:21 PM

விளையாட்டில் நல்ல உடல்வாகு கொண்ட வீரர், வீராங்கனைகளை விட, மாற்றுத்திறனாளி வீரர், வீராங்கனைகளுக்கு நிறைய சாதிக்க வேண்டும் என்ற லட்சியம் இருக்கும்.
தங்கள் உடல் ஊனத்தை பற்றி கவலைப்படாமல், விளையாட்டில் எப்படி பதக்கங்களை அள்ளுவது என்பதில் மட்டுமே அவர்களின் கவனம் இருக்கும். இவர்களில் ஒருவர் பெங்களூரின் ஹர்ஷிதா டேட்டர், 24.
இவருக்கு, 4 வயது இருக்கும் போது விளையாடிய போது, கீழே தவறி விழுந்து விட்டார். இதனால், மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு உள்ளது.
அதுபற்றி பெற்றோருக்கு தெரியவில்லை. டாக்டராக வேண்டும் என்பது தான் ஹர்ஷிதாவின் கனவாக இருந்தது.
மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவால் கடந்த, 2020ம் ஆண்டில் இருந்து, ஹர்ஷிதா பல துன்பங்களை சந்தித்தார். அவரது உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது.
உடலின் வலது பக்கம் செயலிழந்து, மூன்று மாதங்களாக படுக்கையை விட்டு எழுந்திருக்க முடியாத நிலை ஏற்பட்டது. மருத்துவ சிகிச்சைகளால் எழும் நிலைக்கு வந்த பின், விளையாட்டில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் வந்தது.
'டி 37' பிரிவு தடகள வீராங்கனையாக மாறினார். டி 37 பிரிவு என்பது பெருமூளை வாதம், இயக்கம், ஒருங்கிணைப்பை பாதிக்கும் ஒரு நரம்பியல் பாதிப்பு ஆகும். மருத்துவம் படிக்க வேண்டுமா, விளையாட்டில் ஈடுபட வேண்டுமா என்ற சவாலை எதிர்கொண்ட ஹர்ஷிதா மருத்துவத்தை கைவிட்டு விளையாட்டை தேர்வு செய்தார்.
ஓட்டப்பந்தய போட்டிகளில் பங்கேற்றார். குர்கரன் சிங், அய்யப்பா ஆகியோரிடம் பயிற்சி பெறுகிறார்.
கடந்த 2021ல் நடந்த தேசிய பாரா தடகளத்தில், 200, 400 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டிகளில் தங்கம் வென்று அசத்தினார்.
ஓட்டப்பந்தயத்தில் நிறைய சாதிக்க துடிக்கும் கனவில் இருக்கும் ஹர்ஷிதாவுக்கு, வரும் 2028 பாரா ஒலிம்பிக்கில் போட்டியில், முதல் 10 இடங்களுக்குள் வர வேண்டும் என்பது இலக்காக உள்ளது.
அந்த இலக்கை துரத்தி கொண்டு இருக்கிறார். வாழ்க்கையில் எப்படி ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்பதை, விளையாட்டு தனக்கு கற்று கொடுத்தது என்று, ஹர்ஷிதா பெருமிதமாக கூறுகிறார்.
- நமது நிருபர் -

