ADDED : டிச 19, 2025 05:02 AM
கோலார்: கோலார் விஸ்வேஸ்வரையா விளையாட்டு திடலில், நாளையும், நாளை மறுநாளும் மாஸ்டர்ஸ் விளையாட்டுப் போட்டிகள் நடக்கின்றன. இப்போட்டிகளில், 25 மாவட்டங்களில் இருந்து, 750 விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர்.
கோலார் மாவட்ட மாஸ்டர்ஸ் தடகள விளையாட்டு குழுத்தலைவர் வி.கிருஷ்ணா ரெட்டி, நேற்று கோலார் பிரஸ் கிளப்பில் அளித்த பேட்டி:
மாஸ்டர்ஸ் தடக்களப் போட்டிகள், கோலார் மாவட்டத்தில் முதல் முறையாக நடத்தப்படுகின்றன. இது, மாநில அளவில் நடக்கும், 44வது விளையாட்டுப் போட்டியாகும்.
இப்போட்டியில் மாநிலத்தின், 25 மாவட்டங்களில் இருந்து, 750 வீரர்கள் பங்கேற்கின்றனர். மாநில மற்றும் மாவட்ட மாஸ்டர்ஸ் தடகள சங்கத்தின் சார்பில், நாளை, 20ம் தேதி காலை 10:00 மணிக்கு, கோலார் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., கொத்துார் மஞ்சுநாத் விளையாட்டு போட்டிகளை துவக்கி வைக்கிறார்.
கோலார் மாவட்ட பொறுப்பு அமைச்சர் பைரதி சுரேஷ், கோலார் ம.ஜ.த., - எம்.பி., - எம்.மல்லேஷ்பாபு ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். ஆண்களுக்கு வெங்கடேஸ்வரா கல்யாண மண்டபம், பெண்களுக்கு போலீஸ் பவன், வி.ஐ.பி.,க்களுக்கு அரசு விருந்தினர் விடுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு தங்கும் வசதி, உணவு வசதிகளும் செய்யப்பட் டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
கோலார் மாவட்ட மூத்த விளையாட்டு வீரர் மாரப்பா கூறுகையில், ''கோலார் மாவட்டத்தில், 150 பேர் தடக்கள போட்டிகளில் பங்கேற்கின்றனர். இந்த மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெறுவோர் கேரள மாநிலத்தில் பிப்ரவரியில் நடக்கும் தேசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்பர்,'' என்றார்.

