ADDED : ஏப் 28, 2025 06:51 AM

நகர்ப்பகுதிகளில் வசிப்பவர்களே, மாதம் 60,000 ரூபாய் சம்பாதிப்பது கஷ்டம். அதற்கு ஏற்ற வேலையும் கிடைக்க வேண்டும். ஆனால் குக்கிராமத்தில் வசிக்கும் பெண்ணொருவர், ஒரே நாளில் பல தொழில்கள் செய்து, தினமும் 4,000 ரூபாய்க்கும் அதிகமாக சம்பாதித்து, ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறார்.
ஒரு தொழிலை வெற்றிகரமாக நடத்துவதற்குள், போதும், போதும் என்றாகிவிடும். ஆனால் சுனந்தா மூன்று விதமான தொழில் செய்து சம்பாதிக்கிறார். இவரது சுறுசுறுப்பை கண்டு, ஆச்சரியப்படாதவர்கள் இருக்க முடியாது.
பெலகாவி மாவட்டம், காக்வாட் தாலுகாவின், கவுலகுட்டா என்ற குக்கிராமத்தில் வசிப்பவர் சுனந்தா பாட்டீல், 35. இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். வறுமையால் அவதிப்பட்டனர். எனவே, சுனந்தா தன் தாயுடன் சேர்ந்து, சுய தொழில் துவங்கினார்.
மாவு மிஷின், மளிகைக் கடை, கரும்பு ஜூஸ் கடை, சப்பாத்தி விற்பனை என, பல தொழில்கள் செய்கிறார். இவற்றை வெற்றிகரமாக நடத்துகிறார்.
கிராமத்தின் புறநகரின், சாலை ஓரத்தில் தினமும் காலை காபி, டீ விற்று 500 முதல் 600 ரூபாய் சம்பாதிக்கிறார். மதியம் கரும்பு ஜூஸ் விற்று, தினமும் 3,000 முதல் 4,000 ரூபாய் சம்பாதிக்கிறார்.
மாலையில் சப்பாத்தி தயாரித்து, ஒரு சப்பாத்தி ஐந்து ரூபாய் வீதம் விற்பனை செய்வதில் 2,000 முதல் 2,500 ரூபாய் வருவாய் கிடைக்கிறது.
அது மட்டுமல்ல, மளிகைக்கடை, புத்தக கடை, மாவு அரைக்கும் கடைகளும் நடத்துகிறார். இதில் இருந்தும் ஆயிரக்கணக்கான ரூபாய் சம்பாதிக்கிறார்.
தொழிலுக்கு மின்தடை இடையூறாக இருந்தது. எனவே சோலார் மின்சாரத்தால் இயங்க கூடிய இயந்திரங்களை பயன்படுத்த முடிவு செய்தார்.
சிக்கோடியில் இருந்து 4.45 லட்சம் ரூபாய் செலவில், சோலாரால் இயங்கும் கரும்பு ஜூஸ் இயந்திரம், சப்பாத்தி தயாரிக்கும் இயந்திரம் வாங்கினார். இவைகள் தொழிலுக்கு உதவுகின்றன.
குக்கிராமத்தில் வசிக்கும் சுனந்தாவின் சுறுசுறுப்பு, புத்திசாலித்தனம் அனைவரையும் ஆச்சரியப்படுத்துகிறது. வறுமை என வருந்தாமல், கடுமையாக உழைத்தால் வறுமையை விரட்டி, வளமாக வாழ முடியும் என்பதற்கு இவரே சிறந்த எடுத்துக்காட்டு
- நமது நிருபர் -.

