ADDED : ஆக 30, 2026 11:22 PM

- நமது நிருபர் -:
பஸ் வசதி இல்லாத குக்கிராமத்தில், ஆசிரியையாக பணியாற்றிய ரத்ன குமாரிக்கு, மத்திய அரசு, தேசிய விருது வழங்கி கவுரவித்துள்ளது .
ஆசிரியர் பணி என்பது மிகவும் புனிதமானது. சிறார்களுக்கு வளமான எதிர்காலத்தை ஏற்படுத்துவதில், ஆசிரியர்களின் பங்கு அதிகம். ஆசிரியர் பணியை, தெய்வமாக நினைத்து பணியாற்றுவோர் பலர் உள்ளனர். இவர்களில் ரத்னகுமாரியும் ஒருவராவார்.
ஷிவமொக்கா மாவட்டம், ஹொசநகர் தாலுகாவின், சமடகாரு கிராமத்தில் உள்ள அரசு தொடக்க பள்ளியில், கடந்த, 24 ஆண்டுகளாக ஆசிரியையாக பணியாற்றுகிறார். 15 ஆண்டுகளாக தலைமை ஆசிரியையாக பணியாற்றுகிறார்.
தீர்த்தஹள்ளியில் வசிக்கும் இவர், தினமும் பஸ்சில் பணிக்கு வந்து செல்கிறார். இவரது கணவர், தீர்த்தஹள்ளியின் ஆரகா கிராமத்தின் அரசு பி.யு.சி., கல்லுாரியில் முதல்வராக பணியாற்றுகிறார்.
தம்பதிக்கு மகன், மகள் உள்ளனர். இருவருமே இதே அரசு பள்ளியில் படித்தவர்கள். மகள் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் முடித்து, பெங்களூரில் பணியாற்றுகிறார். மகன் இன்ஜினியரிங் படிக்கிறார். மலை கிராமமான சமடகாரு கிராமத்துக்கு, சரியான பஸ் வசதி இல்லை. நீண்ட துாரம் நடந்து செல்ல வேண்டும்.
இந்த கிராமத்தின் பள்ளியில் 56 மாணவர்கள் உள்ளனர். இதில், 42 மாணவர்கள் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்தவர்கள். இங்கு தரமான கல்வி கிடைப்பதால், பெற்றோர் தாங்களே வாகன வசதி செய்து, பிள்ளைகளை சமடகாரு பள்ளிக்கு அனுப்புகின்றனர்.
கிராமத்தின் பள்ளியில் இயற்கையுடன் ஒருங்கிணைந்து, மாணவர்களுக்கு கற்றுத்தருவது மற்றொரு சிறப்பாகும். தலைமை ஆசிரியை ரத்னகுமாரியின் முயற்சியால், பள்ளி முன் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இங்கு மருத்துவ குணம் கொண்ட மூலிகை செடிகள் வளர்க்கப்பட்டுள்ளன. நான்கு சுவர்களின் நடுவே பாடம் நடத்தாமல், இயற்கை எழில் மிகுந்த பூங்காவில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
இத்தகைய நடவடிக்கையால், மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது. ரத்னகுமாரியின் சேவையை கவனித்து, 2019ல் மாநில அரசு நல்லாசிரியை விருது வழங்கி கவுரவித்தது. இப்போது மத்திய அரசின் தேசிய நல்லாசிரியை விருது கிடைத்துள்ளது.
இது குறித்து, ரத்னகுமாரி கூறியதாவது:
ஹொசநகரின் கல்வி அதிகாரிகள், தாலுகா ஆசிரியர் சங்கத்தின் அறிவுறுத்தலால், மத்திய அரசின் தேசிய விருதுக்கு விண்ணப்பம் அனுப்பினேன். ஷிவமொக்கா மாவட்டத்தில் இருந்து, நான் உட்பட ஆறு ஆசிரியர்களின் பெயர்கள், இறுதி கட்ட பரிசீலனைக்கு வந்தன. பள்ளியில் பாடம் நடத்தும் முறை குறித்து, அறிக்கை கேட்டிருந்தனர். நாங்களும் தயாரித்து சமர்ப்பித்தோம்.
என்னை விருதுக்கு தேர்வு செய்தனர். எனக்கு விருது கிடைக்க, சிறார்களுக்கு பள்ளிப்பருவத்தில் இருந்தே, இயற்கை, சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே, காரணமாக இருக்கும் என, நினைக்கிறேன். எனக்கு விருது கிடைக்கும் என, எதிர்பார்க்கவே இல்லை.
மிகவும் பின் தங்கிய, பஸ் வசதி சரிவர இல்லாத குக்கிராமத்தை, அரசு அடையாளம் கண்டிருப்பது, பெருமையான விஷயமாகும். ஆசிரியர்களின் பிரதிநிதியாக ஜனாதிபதி திரவுபதி முர்மு கையால் விருது பெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
