செப் 04, 2026

வேத மந்திரங்களின் முழக்கத்துடன், பல்வேறு சிறப்பு பூஜைகள், ஹோமங்கள் மற்றும் மஹா அபிஷேகங்கள் ஸ்ரீ விநாயகர் மற்றும் ஸ்ரீ கார்த்திகேயா கோவில் 4-வது ஆண்டு விழா செப்டம்பர் 4, வெள்ளிக்கிழமை அன்று நொய்டா செக்டார் 62ல் உள்ள கோவில் வளாகத்தில் பக்தி பரவசத்துடன் கொண்டாடப்பட்டது.
இந்தச் சிறப்பு வாய்ந்த தருணத்தில், 11 வாத்தியார்கள் அடங்கிய குழுவினரால் மூல ஜபமும், ஹோமமும் நடத்தப்பட்டன. இதில் ஸ்ரீ மஹா கணபதி, ஸ்ரீ ராமர் பரிவாரம், ஸ்ரீ ஹனுமான், ஸ்ரீ சுப்ரமணியர், ஸ்ரீ துர்க்கை, ஸ்ரீ நவக்கிரகங்கள் மற்றும் ஸ்ரீ ருத்திரம் ஆகியவற்றின் மந்திரங்கள் ஜபிக்கப்பட்டு ஹோமங்கள் செய்யப்பட்டது. கோவிலின் அனைத்து சந்நிதிகளில் மஹா அபிஷேகமும் சிறப்பாக நடைபெற்றது.
ஆண்டு விழாவின் சிறப்பு நிகழ்வாக, அனைத்து மூர்த்திகளுக்கும் வெள்ளி கவசத்தால் அலங்கரிக்கப்பட்டது. இந்த அனைத்து பூஜை, ஹோமங்களும், மற்றும் அபிஷேகங்களும் வி.பி.எஸ் ஆஸ்தான வாத்தியார் ஸ்ரீ சங்கர் அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் மேற்பார்வையில், கோவில் வாத்தியார்கள் : ஸ்ரீ மணிகண்டன் சர்மா, மற்றும் ஸ்ரீ மோஹித் மிஸ்ரா அவர்களின் உதவியுடன் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
நாள் முழுவதும் நடைபெற்ற ஆன்மீக நிகழ்வுகள் பூர்ணாஹுதியுடன் நிறைவடைந்தன. அதனைத் தொடர்ந்து மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டு, வருகை தந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் மஹா பிரசாதம் வழங்கப்பட்டது. நொய்டா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்து ஆன்மீக நிகழ்வுகளில் பக்திபூர்வமாக பங்கேற்றனர்.
இக்கோவிலின் மகா கும்பாபிஷேகம் 21 ஆகஸ்ட் 2022 அன்று நடைபெற்றது. இத்திருத்தலத்தை நிர்வகிக்கும் வேதிக் பிரச்சார் சன்ஸ்தான் அமைப்பு, நொய்டா செக்டார்-22 இல் அமைந்துள்ள ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோவிலையும் நிர்வகித்து வருகிறது. ஒரே சிந்தனை கொண்ட பக்தர்களால் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, கடந்த 40 ஆண்டுகளாக ஆன்மீக மற்றும் வேத பாரம்பரியங்களின் பிரச்சாரத்திலும் சேவை பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது .
