செப் 12, 2026

வரசித்தி விநாயகர் ஆலய பிரதிஷ்டை தின விழா
நொய்டா, செக்டர் 22-ல் அமைந்துள்ள ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தின் பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு, ஆலய வளாகத்தில் ஸ்ரீ மஹா கணபதி ஹோமம், கலச ஸ்தாபனம், துர்கா ஹோமம், நவகிரக ஹோமம், ருத்ர ஹோமம், ஸ்ரீ மஹாந்யாஸ ஏகாதச ருத்ராபிஷேகம் மற்றும் வஸோர்தாரா உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் மற்றும் ஹோமங்கள் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, பூர்ணாஹுதியிலும் பங்கேற்றனர். நாள் முழுவதும் நடைபெற்ற ஆன்மீக நிகழ்வுகள் மகா தீபாராதனையுடன் நிறைவுபெற்றன. தொடர்ந்து, பக்தர்கள் அனைவருக்கும் மகா பிரசாதம் வழங்கப்பட்டது.
முழு பூஜைகள் மற்றும் ஹோமங்கள், வேதிக் பிரசார் சஸ்தானத்தின் ஆஸ்தான வாத்தியார்கள் ஸ்ரீராம் மற்றும் சங்கர் ஆகியோரின் மேற்பார்வை மற்றும் வழிகாட்டுதலின் கீழ், பதினேழு புரோகிதர்கள் கொண்ட குழுவினருடன், ஆலய வாத்தியார் ஜெகதீஷ் ஒத்துழைப்புடன் சிறப்பாக நடைபெற்றது.
வரசித்தி விநாயகர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் கடந்த 29 ஆகஸ்ட் 2022 அன்று நடைபெற்றது. வேதிக் பிரசார் சன்ஸ்தான் , ஒரே சிந்தனையுடன் ஒன்றிணைந்த பக்தர்களால் தொடங்கப்பட்டு, கடந்த நாற்பது ஆண்டுகளாக ஆன்மிக மற்றும் வேதப் பணிகளை சிறப்பாக சேவை செய்து வருகிறது. இந்நிறுவனம் நொய்டா செக்டர் 22-ல் உள்ள வரசித்தி விநாயகர் ஆலயத்துடன், செக்டர் 62-ல் அமைந்துள்ள விநாயகர் மற்றும் கார்த்திகேயர் ஆலயங்களையும் நிர்வகித்து வருகிறது.
- நொய்டாவில் இருந்து வெங்கடேஷ்
