ஹிந்து கோவிலில் நாச வேலை; அமெரிக்காவில் காலிஸ்தான் பயங்கரவாதிகள் அட்டூழியம்
ஹிந்து கோவிலில் நாச வேலை; அமெரிக்காவில் காலிஸ்தான் பயங்கரவாதிகள் அட்டூழியம்
ADDED : ஆக 13, 2025 03:11 PM

வாஷிங்டன்: அமெரிக்காவில் உள்ள ஹிந்து கோவிலில் இந்தியாவிற்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்டிருந்தது. காலிஸ்தான் பயங்கரவாதிகள் இந்த நாச வேலையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
அமெரிக்காவின் ஜான்சன் கவுண்டியில் உள்ள ஒரு நகரமான இன்டியானாவின் கிரீன்வுட்டில், ஹிந்து பக்தர்கள் அதிகம் வழிபடும் கோவில்கள் உள்ளன. இப்பகுதியில் செயல்படும் காலிஸ்தான் ஆதரவு பிரிவினைவாதிகள், போச்சசன்வாசி ஸ்ரீ அக்ஷர் புருஷோத்தம் சுவாமிநாராயண் சன்ஸ்தா (BAPS) கோவில் சுவர்களில் இந்தியாவிற்கு எதிரான மற்றும் மோடிக்கு எதிரான வாசகங்கள் எழுதி வைத்துள்ளனர்.
ஒரு வருடத்திற்குள் நான்காவது முறையாக, இந்த கோவிலில், காலிஸ்தான் பயங்கரவாதிகள் அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தக் குற்றத்தைச் செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்துள்ளன. இது குறித்து, அமெரிக்காவின் சிகாகோவில் உள்ள இந்திய துணைத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சுவாமிநாராயண் சன்ஸ்தா கோவிலின் பிரதான அறிவிப்புப் பலகையை அவமதித்து வாசகங்கள் எழுதப்பட்டிருந்தது கண்டிக்கத்தக்கது. துணைத் தூதரகம் உள்ளூரில் வசிக்கும் இந்தியர்களுடன் தொடர்பில் உள்ளது.
உடனடி நடவடிக்கைக்காக சட்ட அமலாக்க அதிகாரிகளிடம் இந்த விஷயத்தை முறையிட்டுள்ளது. குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.