பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் பரிசு அனுப்பிய பிரிட்டன் மன்னர்
பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் பரிசு அனுப்பிய பிரிட்டன் மன்னர்
ADDED : செப் 17, 2025 10:30 PM

புதுடில்லி: பிரதமர் மோடியின் 75வது நாளை முன்னிட்டு, பிரிட்டன் மன்னர் சார்லஸ் கடம்ப மரக்கன்று ஒன்றை பரிசாக அனுப்பி உள்ளார்.
பிரதமர் மோடிக்கு இன்று 75வது பிறந்த நாள். இதனை முன்னிட்டு அவருக்கு உலக தலைவர்கள், நம் நாட்டு தலைவர்கள், பாஜவினர், பொது மக்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பிரதமர் மோடிக்கு, பிரிட்டன் மன்னர் சார்லஸ் பிறந்த நாள் பரிசாக கடம்ப மரக்கன்று ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
இது குறித்த விவரத்தை இந்தியாவுக்கான பிரிட்டன் தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: பிரிட்டன் மன்னர் சார்லஸ், பிரதமர் மோடிக்கு அவரது பிறந்த நாளை முன்னிட்டு கடம்ப மரக்கன்று ஒன்றை பரிசாக அனுப்பி வைத்துள்ளார். மோடி துவக்கி வைத்த தாயின் பெயரால் மரக்கன்று நடுங்கள் என்ற இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு இந்தப் பரிசை அனுப்பி வைத்துள்ளார். இது சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு அவர்களின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது எனத் தெரிவித்துள்ளது.
மற்றொரு அறிக்கையில், பிரதமர் மோடி கடந்த ஜூலை மாதம் பிரிட்டன் வந்த போது, சோனோமா மரத்தை மன்னர் சார்லசுக்கு பரிசாக வழங்கினார். காலநிலை மற்றும் சுத்தமான எரிசக்தி தொடர்பான ஒத்துழைப்பு என்பது காமன்வெல்த் மற்றும் பிரிட்டன்- இந்தியா இடையிலான கூட்டாண்மையின் முக்கிய தூணாகும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
புர்ஜ் கலிபாவில்
துபாயில் புகழ்பெற்ற புர்ஜ் கலிபாவிலும் பிரதமரின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது புகைப்படத்துடன் பிறந்த நாள் வாழ்த்துச்செய்தியும் மின்னொளியில் ஒளிர்ந்தது.