ஈரான் அணுசக்தித் திட்டத்தை தொடங்கினால் அழித்துவிடுவோம்: அதிபர் டிரம்ப் எச்சரிக்கை
ஈரான் அணுசக்தித் திட்டத்தை தொடங்கினால் அழித்துவிடுவோம்: அதிபர் டிரம்ப் எச்சரிக்கை
ADDED : டிச 30, 2025 08:47 AM

வாஷிங்டன்: ''ஈரான் தனது அணுசக்தித் திட்டத்தை மீண்டும் தொடங்கினால் அழித்துவிடுவோம். அவர்களை சின்னாபின்னமாக்குவோம்'' என அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள தனது இல்லத்தில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார். ஈரானுக்கு எதிராக புதிய ராணுவ நடவடிக்கைகளை எடுப்பதன் அவசியம் குறித்து டிரம்ப் உடன் நெதன்யாகு ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. நிருபர்களிடம் அதிபர் டிரம்ப் கூறியதாவது: ஜூன் மாதம் முக்கிய அணுசக்தி செறிவூட்டல் தளங்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களால் ஈரானின் அணுசக்தித் திறன்கள் முற்றிலும் முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டன.
இப்போது ஈரான் மீண்டும் கட்டமைக்க முயற்சிக்கிறது என்று நான் கேள்விப்படுகிறேன். அவர்கள் அப்படிச் செய்தால், நாம் அவர்களைத் தடுத்து நிறுத்த வேண்டியிருக்கும். நாம் அவர்களைத் தடுத்து நிறுத்துவோம். அவர்களைச் சின்னாபின்னமாக்குவோம். அந்த திட்டத்தை முற்றிலுமாக அழித்துவிடுவோம். ஆனால், அப்படி அவர்கள் செய்ய மாட்டார்கள் என்று நம்புகிறேன்.
இஸ்ரேல்-ஹமாஸ் போர்நிறுத்த ஒப்பந்தத்தின் இரண்டாம் கட்டத்தை எங்களால் முடிந்தவரை விரைவாக அடைய விரும்புகிறோம். ஆனால், ஹமாஸ் ஆயுதங்களைக் கைவிட வேண்டும். பேச்சுவார்த்தையில் நாங்கள் நிறைய முன்னேற்றம் அடைந்துள்ளோம். மூன்று பிரச்னைகளை ஏற்கனவே தீர்த்துவிட்டோம். தவறான பிரதமர் இருந்திருந்தால் இஸ்ரேல் என்ற நாடே இருந்திருக்காது. இவ்வாறு அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
2வது முறை
இதற்கிடையே ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து, உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியை மியாமியில் நேரில் சந்தித்த ஒரு நாளுக்குப் பிறகு, அதிபர் டிரம்ப் ரஷ்ய அதிபர் புடினுடன் மீண்டும் பேசினார். கடந்த 24 மணி நேரத்திற்குள் டிரம்பு புடின் உடன் இரண்டாவது முறை தொலை பேசியில் பேசி இருக்கிறார். இதனை உறுதி செய்த வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட், 'உக்ரைன் தொடர்பாக அதிபர் டிரம்ப் ரஷ்ய அதிபர் புடினுடன் தொலைபேசியில் உரையாடினார்'' என தெரிவித்துள்ளார்.

