ADDED : ஆக 08, 2025 01:24 AM

நியூயார்க்:அமெரிக்காவில் 'யுனைடெட் ஏர்லைன்ஸ்' நிறுவனத்தின் விமான இயக்கங்களுக்கான கணினி அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, 850 விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. இதனால், ஆயிரக்கணக்கான பயணியர் அவதிக்குள்ளாயினர்.
அமெரிக்காவின் இலினாய்ஸ் மாகாணம் சிகாகோவை தலைமையிடமாக வைத்து யுனைடெட் ஏர்லைன்ஸ் செயல்படுகிறது.
விமானங்கள் புறப்பாடு மற்றும் தரையிறங்குவதற்கு சிக்னல் வழங்கும் தொழில்நுட்பத்தில் நேற்று திடீரென கோளாறு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அமெரிக்க விமானப் போக்குவரத்து ஆணையம், நாடு முழுதும் உள்ள விமான நிலையங்களை எச்சரித்தது.
இதனால், சிகாகோ, டென்வர், நியூவார்க், ஹூஸ்டன் மற்றும் சான் பிரான்சிஸ்கோ விமான நிலையங்களில், இந்த நிறுவனத்தின் விமானங்களின் புறப்பாடு பாதிக்கப்பட்டது.
இது சைபர் தாக்குதல் அல்ல என்பதை விமான நிறுவனம் உறுதிப்படுத்தி யுள்ளது. சில மணி நேரத்தில் தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டது.
ஆனாலும், அதன் தாக்கத்தால், 850 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டது; 23 விமானங்கள் சேவை முழுதுமாக ரத்து செய்யப்பட்டது. இதனால், ஆயிரக்கணக்கான பயணியர் அவதிக்குஉள்ளாயினர்.
கடந்த வாரம், 'அலாஸ்கா ஏர்லைன்ஸ்' விமான நிறுவனத்திலும் இதுபோன்ற தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால் அதன் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

