கச்சத்தீவை மீட்பது முடியாத விஷயம் இலங்கை அமைச்சர் கருத்து
கச்சத்தீவை மீட்பது முடியாத விஷயம் இலங்கை அமைச்சர் கருத்து
ADDED : ஏப் 05, 2024 10:53 PM

கொழும்பு :''இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை மீட்போம் என இந்தியாவில் இருந்து அறிக்கைகள் வெளியாவதற்கு எவ்வித அடிப்படைகளும் இல்லை. அங்கு தேர்தல் நேரம் என்பதால் இது போன்ற குரல்கள் எழுவது இயல்பு,'' என, அந்நாட்டு மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று தெரிவித்தார்.
ஒப்புதல்
லோக்சபா தேர்தல் நேரத்தில் கச்சத்தீவு விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
மறைந்த இந்திரா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியின் போது, 1974ல் கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டதாகவும், அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதியின் ஒப்புதலுடன் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானதாகவும், நம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் குற்றஞ்சாட்டி உள்ளார்.
இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை மீட்போம் என, மத்தியில் ஆளும் பா.ஜ., கூறி வருகிறது.
இந்த விவகாரம் குறித்து, இலங்கையின் மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று கூறியதாவது:இந்தியாவில் தேர்தல் நேரம் என்பதால், கச்சத்தீவு குறித்து இது போன்ற குரல்கள் எழுவது இயல்பு.
இலங்கை மீனவர்கள் கச்சத்தீவு பகுதிக்குள் நுழையக் கூடாது என்பதற்காகவும், அந்த வளம் நிறைந்த பகுதியில் இலங்கை எந்த உரிமையும் கோரக்கூடாது என்பதற்காகவும், இந்த இடத்தை பாதுகாக்க, இந்தியா தன் நலன்களின் அடிப்படையில் செயல்படுகிறது என்று நான் நினைக்கிறேன்.
தடையில்லை
இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை மீட்போம் என்பதற்கு எவ்வித அடிப்படையும் இல்லை.
கடந்த 1974 ஒப்பந்தப்படி, இரு தரப்பு மீனவர்களும் இரு நாட்டு பகுதிகளில் மீன் பிடிக்க தடையில்லை.பின், 1976ல் இந்த ஒப்பந்தம் மறுஆய்வு செய்யப்பட்டு திருத்ததப்பட்டது.
அதன்படி, இரு தரப்பு மீனவர்களும் தங்கள் கடல் எல்லையை தாண்டி மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டது.இந்த 1976 ஒப்பந்தத்துக்காக, மேற்கு கரை என்ற பகுதியை இந்தியா தங்கள் வசம் எடுத்துக் கொண்டது. இது, கன்னியாகுமரி கடலுக்கு கீழ் உள்ளது. பரந்த கடல் வளத்துடன் கூடிய இந்த பகுதி, கச்சத்தீவை விட 80 மடங்கு பெரியது.இவ்வாறு அவர் கூறினார்.

