'இந்தியாவுடன் பேச்சுக்கு தயார்' அறிவித்தார் பாகிஸ்தான் பிரதமர்
'இந்தியாவுடன் பேச்சுக்கு தயார்' அறிவித்தார் பாகிஸ்தான் பிரதமர்
ADDED : செப் 27, 2025 02:15 AM
நியூயார்க்:ஐ.நா., கூட்டத்தில் உரையாற்றிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், “இந்தியாவுடன் நிலுவையில் உள்ள அனைத்து பிரச்னைகள் குறித்தும் முழுமையான, விரிவான, தீர்வை நோக்கிய பேச்சு நடத்த பாகிஸ்தான் தயாராக உள்ளது,” என்றார்.
ஐக்கிய நாடுகள் பொது சபையின் 80வது கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் நேற்று பேசியதாவது:
இந்தியாவுடன் நிலுவையில் உள்ள அனைத்து பிரச்னைகளிலும், முழுமையான, விரிவான, தீர்வை மையப்படுத்திய பேச்சுக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது. உலக நாடுகள் முன்னிலையில் நான் தரும் உண்மையான, தீவிரமான முன்மொழிவு இது.
பேச்சு மற்றும் துாதரக உறவு மூலம் பிரச்னைகளை அமைதியான முறையில் தீர்ப்பதில் பாகிஸ்தான் நம்பிக்கை வைத்துள்ளது.
தெற்கு ஆசியாவில் போரை தவிர்க்க, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் செய்த முயற்சிகள் சிறப்பானவை. அதற்காகவே அவருக்கு நோபல் அமைதி பரிசுக்கு பாகிஸ்தான் பரிந்துரைத்தது. இது நாங்கள் செய்யக்கூடிய குறைந்தபட்ச நன்றிக் கடன். மே மாதம் நடந்த 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கைக்குப் பின் ஏற்பட்ட இந்தியா - பாகிஸ்தான் மோதலின் போது, இந்தியாவின் ஏழு ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்தினோம்.
பாகிஸ்தான், அனைத்து வடிவங்களிலும் பயங்கரவாதத்தை கண்டிக்கிறது. எங்கள் நாட்டில், வெளிநாட்டின் நிதி ஆதரவு பெற்ற தெஹ்ரிக் - இ --தலிபான் - பாகிஸ்தான், பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் போன்ற அமைப்புகள் செயல்படுகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.