ரஷ்யாவின் யுரேனியத்திற்கு மட்டும் அனுமதி; அமெரிக்கா ஓரவஞ்சனை
ரஷ்யாவின் யுரேனியத்திற்கு மட்டும் அனுமதி; அமெரிக்கா ஓரவஞ்சனை
ADDED : செப் 18, 2026 06:49 AM

வாஷிங்டன்: ரஷ்யாவிடம் எண்ணெய் கொள்முதல் செய்ய தடை விதித்துள்ள அமெரிக்கா, தங்களுக்கு யுரேனியம் தேவைப்படுவதால், அதற்கு மட்டும் தடை விதிக்க மறுத்துள்ளது.
ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் அல்லது இயற்கை எரிவாயுவை வாங்கும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு எதிராக 100 சதவீதம் வரை சுங்க வரி மற்றும் புதிய தடைகளை விதிக்கும் சட்ட மசோதா, அமெரிக்க பார்லியில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு 262 பேர் ஆதரவும், 159 பேர் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.
ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு வர்த்தகத்திற்கு கடுமையான தடைகள் விதிக்கப்பட்டாலும், அமெரிக்காவின் சொந்த அணுசக்தித் தேவைகளைக் கருத்தில் கொண்டு, அணுசக்தி ஒத்துழைப்பு மற்றும் சில குறிப்பிட்ட குறைந்த செறிவூட்டப்பட்ட யுரேனியம் இறக்குமதிகளுக்கு இந்த மசோதாவில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் அணு உலைகளுக்குத் தேவையான செறிவூட்டல் சேவைகளில், ரஷ்யா சுமார் 26 சதவீத பங்களிப்பைக் கொண்டுள்ளதால், உடனடியாக முழுமையான தடையை அமல்படுத்த முடியாத நிலை அமெரிக்காவுக்கு உள்ளது.
அமெரிக்க பார்லியின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா, தற்போது அதிபர் டிரம்பின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. அவர் விரைவில் இதில் கையெழுத்திடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
