குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது; பிரதமர் மோடி திட்டவட்டம்
குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது; பிரதமர் மோடி திட்டவட்டம்
UPDATED : நவ 12, 2025 11:03 AM
ADDED : நவ 12, 2025 03:40 AM

திம்பு: “டில்லி குண்டுவெடிப்பு சம்பவத்தின் சதி பற்றி புலனாய்வு அமைப்புகள் கண்டுபிடிக்கும்; அதன் பின்னால் உள்ளவர்கள் யாரும் தப்ப முடியாது,” என, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இரண்டு நாட்கள் அரசுமுறை பயணமாக நம் அண்டை நாடான பூடான் சென்ற பிரதமர் மோடி, திம்பு நகரில் நடந்த அந்நாட்டின் மன்னர் ஜிக்மே சிங்யே வாங்சுக்கின், 70வது பிறந்த நாள் விழாவில் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: நான் கனத்த இதயத்துடன் இங்கு வந்துள்ளேன். டில்லியில் நடந்த கொடூர சம்பவத்தால் மிகுந்த மன வருத்தத்தில் இருக்கிறேன். இந்த கோர தாக்குதல் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்களின் துயரத்தை நான் புரிந்துகொள்கிறேன்.
ஒட்டுமொத்த நாடும் அவர்களுடன் துணை நிற்கிறது. இந்த சதியின் காரணத்தை புலனாய்வு அமைப்புகள் கண்டுபிடிக்கும். அதன் பின்னால் உள்ளவர்கள் யாரும் தப்பிக்க முடியாது. அவர்கள் அனைவரும் நீதியின் முன் நிறுத்தப்பட்டு தண்டனையைப் பெற்றுத் தருவோம். இவ்வாறு அவர் பேசினார்.

