உக்ரைன் மீது நடப்பது மோடியின் போர்: சொல்கிறார் அமெரிக்க அதிபரின் ஆலோசகர்
உக்ரைன் மீது நடப்பது மோடியின் போர்: சொல்கிறார் அமெரிக்க அதிபரின் ஆலோசகர்
ADDED : ஆக 29, 2025 06:29 AM
வாஷிங்டன்: “ரஷ்யா - உக்ரைன் இடையேயான போரில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதால் இது, பிரதமர் நரேந்திர மோடியின் போர் என்றே சொல்ல வேண்டும்,” என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் ஆலோசகர் பீட்டர் நவரோ தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்பின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ கூறியிருப்பதாவது:
ரஷ்யாவிடம் இருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்கி வரும் இந்தியாவை தண்டிக்கும் நோக்கிலேயே, 50 சதவீத வரி விதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தியா அதை நிறுத்தினால் நிச்சயம் கூடுதல் வரி விதிப்பு குறைக்கப்பட்டு, 25 சதவீதம் வரி மட்டுமே விதிக்கப்படும்.
இந்தியா தொடர்ந்து ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கி வருவதால், கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீதான போரில், ரஷ்யாவுக்கு மறைமுக உதவி கிடைக்கிறது.
அந்த நிதி ஆதாரத்தை கொண்டுதான் ரஷ்யா தன் படை பலத்தை உறுதி செய்வதுடன், உக்ரைன் மீதான தாக்குதலையும் தொடர்ந்து வருகிறது-.
இதன் வாயிலாக, போரில் ரஷ்யாவுக்கு இந்தியா உதவி வருகிறது. அதனால், ரஷ்யா - உக்ரைன் போரை, 'மோடியின் போர்' என்றே சொல்ல வேண்டும்.
உக்ரைனுக்கு தேவையான ராணுவ உதவிகளை அமெரிக்கா வழங்கி வருகிறது. இதற்கான நிதி ஆதாரம், அமெரிக்க மக்களின் வரி பணத்தில் இருந்துதான் வழங்கப்படுகிறது.
இந்தியா, ரஷ்யாவிடம் இருந்து தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெயை வாங்குவது அமெரிக்காவுக்கு எதிரானது. இந்தியாவால், அமெரிக்க மக்களும், வணிக நிறுவனங்களும் இழப்பை சந்திக்கின்றனர்.
வர்த்தகம் மற்றும் வரி விதிப்பு கொள்கையில் இந்தியா அகந்தையுடன் இருப்பதாகவே நான் கருதுகிறேன். அமெரிக்கப் பொருட்களுக்கு அதிக வரிகளை தாங்கள் விதிக்கவில்லை என்று அவர்கள் கூறுகின்றனர். ஆனால் அது உண்மை இல்லை.
இதேபோன்று, நாங்கள் யாரிடம் வேண்டுமானாலும் எண்ணெய் வாங்குவோம் என்று சொல்லும் இந்தியாவுக்கு, நாங்கள் அதிக வரி விதிக்கக்கூடாது என சொல்வதில் நியாயமில்லை என்றே எனக்கு தோன்றுகிறது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா, மற்றவர்களுக்கு முன்மாதிரியாக நடந்துகொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.
இதற்கு பதிலளித்து நம் வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:
நாட்டின், 140 கோடிக்கும் அதிகமான மக்களின் எரிசக்தி பாதுகாப்புதான் எங்களுக்கு முக்கியம். எண்ணெய் வாங்கும் முடிவுகள் சந்தை நிலவரங்களின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகின்றன. மேலும், சீனாவும், ஐரோப்பிய நாடுகளும் ரஷ்ய எரிபொருளை தொடர்ந்து வாங்கி வரும் நிலையில், அமெரிக்கா இந்தியாவை மட்டும் குறிவைப்பது ஏன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.