UPDATED : நவ 27, 2025 07:21 AM
ADDED : நவ 26, 2025 07:39 PM

ஹாங்காங்: ஹாங்காங்கில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ பற்றியதில், 44 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஹாங்காங்கில் உள்ள தை போ (Tai Po) மாவட்டத்தில் இன்று அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் பயங்கரமாக தீப்பற்றி கொண்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த கோரச் சம்பவத்தில், 44 பேர் உயிரிழந்தனர் என்பதை ஹாங்காங் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
தீ விபத்தில் இறந்தவர்களின் 37 வயதான தீயணைப்பு படை வீரரும் ஒருவர் ஆவார். மேலும் மூன்று பேர் பலத்த காயம் அடைந்து, ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது, 700 பேர் குடியிருப்பு வளாகத்திலிருந்து வெளியேற்றப்பட்டு தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தீ திடீரென பற்றி கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
அருகில் வசிப்பவர்கள் வீட்டிற்குள்ளேயே இருக்கவும், கதவுகள் மற்றும் ஜன்னல்களை மூடிக்கொண்டு இருக்கவும் தீயணைப்பு துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.அப்பகுதியைச் சுற்றியுள்ள வீடியோ காட்சிகளில் அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து அடர்த்தியான கரும்புகைகள் வெளிப்படுவது இடம் பெற்றுள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

