லண்டனில் ஹிந்துக்கள் போராட்டத்தில் காலிஸ்தான் ஆதரவாளர்களால் குழப்பம்
லண்டனில் ஹிந்துக்கள் போராட்டத்தில் காலிஸ்தான் ஆதரவாளர்களால் குழப்பம்
ADDED : டிச 29, 2025 02:58 AM

லண்டன்: வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதலை கண்டித்து லண்டனில் வசிக்கும் இந்திய மற்றும் வங்கதேச ஹிந்துக்கள் நடத்திய அமைதி போராட்டத்துக்குள் புகுந்து காலிஸ்தான் ஆதரவாளர்கள் இடையூறு ஏற்படுத்தினர்.
ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள வங்கதேச துாதரகம் முன் நேற்று திரண்ட வங்கதேச ஹிந்து சங்கத்தினர் மற்றும் இந்தியர்கள் அந்நாட்டில் ஹிந்துக்களுக்கு எதிராக நடக்கும் தாக்குதல்களை கண்டித்து போராட்டம் நடத்தினர்.
குறிப்பாக ஹிந்து இளைஞர்கள் திபு சந்திர தாஸ், அம்ரித் மோண்டல் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். வங்கதேசத்தில் ஹிந்துக்கள் பாதுகாப்பாக வாழ நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
பஞ்சாப் மாநிலத்தை தனி நாடாக அறிவிக்க கோரும் காலிஸ்தான் ஆதரவாளர்கள் திடீரென போராட்டம் நடக்கும் இடத்திற்கு வந்து இடையூறு செய்யும் வகையில் முழக்கங்களை எழுப்பினர். இதனால், அங்கு சிறிய அளவில் கைகலப்பு ஏற்பட்டது.
ஹிந்துக்களின் போராட்டத்தை சீர்குலைக்க, பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., அவர்களை ஏவியதாக தகவல் வெளியாகி உள்ளது.

