எதிர்த்து குரல் கொடுத்த தளபதி 'துாக்கப்பட்ட பரிதாபம்'
எதிர்த்து குரல் கொடுத்த தளபதி 'துாக்கப்பட்ட பரிதாபம்'
ADDED : ஆக 24, 2025 12:41 AM
வாஷிங்டன்:'ஈரான் அணுசக்தி வளாகங்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் குறைந்த சேதத்தையே ஏற்படுத்தியுள்ளது' என்று அமெரிக்க ராணுவ உளவுப்பிரிவு சார்பில் அறிக்கை தரப்பட்டதால், ஆத்திரமடைந்த அதிபர் டொனால்டு டிரம்ப், அத்துறை தலைவர் ஜெப்ரி குரூஸை பதவி நீக்க உத்தரவிட்டார்.
மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே கடந்த ஜூனில் மோதல் ஏற்பட்டது. அப்போது, இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரான் மீது 'ஆப்பரேஷன் மிட்நைட் ஹாமர்' என்ற பெயரில் அமெரிக்கா தாக்குதல் நடத்தியது.
அமெரிக்காவின் இந்த தாக்குதலில் போர்டோ, நடான்ஸ், இஸ்பஹான் ஆகிய மூன்று அணுசக்தி வளாகங்கள் முற்றிலும் சேதமடைந்ததாக அதிபர் டிரம்ப் அப்போது அறிவித்தார்.
இந்நிலையில், அமெரிக்க ராணுவத்தின் புலனாய்வு அமைப்பு, தாக்குதல் தொடர்பான அறிக் கையை சமீபத்தில் வெளியிட்டது. அதில், 'அமெரிக்காவின் தாக்குதல் குறைந்த சேதத்தை மட்டுமே ஏற்படுத்தி உள்ளது. இதிலிருந்து மீண்டு, ஈரான் சில மாதங்களில் அணுசக்தி பணிகளை துவங்க வாய்ப்பு உள்ளது' என கூறியிருந்தது.
இதனால் ஆத்திரமடைந்த டிரம்ப், ராணுவத்தின் புலனாய்வு அமைப்பின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ஜெப்ரி குரூஸை பதவி நீக்கம் செய்ய ராணுவ அமைச்சரிடம் கூறியுள்ளார். அதன்படி எவ்வித காரணமும் தெரிவிக்காமல், ராணுவ உளவுப்பிரிவு தலைவர் பொறுப்பில் இருந்து நேற்று அவர் நீக்கப்பட்டார்.