UPDATED : நவ 05, 2025 03:18 PM
ADDED : நவ 04, 2025 04:51 PM

லண்டன்: பிரிட்டனின் மிகப்பெரிய பணக்காரரும், 'ஹிந்துஜா' குழுமத் தலைவரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கோபிசந்த் ஹிந்துஜா, 85, உடல்நலக் குறைவால் லண்டனில் நேற்று காலமானார்.
தொழில் வட்டாரங்களில் ஜி.பி., என்ற குறியீடுடன் அழைக்கப்படும், கோபிசந்த் ஹிந்துஜா, மஹாராஷ்டிராவின் மும்பையில் பிறந்தார். மேற்காசிய நாடான ஈரானின் டெஹ்ரானுக்கு குடிபெயர்ந்த அவர், தன் வர்த்தக வாழ்க்கையை துவக்கினார்.
இவரது தலைமையில், 1984ல், 'கல்ப் ஆயில்' நிறுவனமும், 1987ல், அப்போது நெருக்கடியில் இருந்த இந்திய வாகன உற்பத்தியாளரான அசோக் லேலண்ட் நிறுவனமும் கையகப்படுத்தப்பட்டன. இது, இந்தியாவிற்கு வந்த முதல் முக்கிய என்.ஆர்.ஐ., முதலீடு.
கடந்த 2023ல், மூத்த சகோதரர் ஸ்ரீசந்த் ஹிந்துஜா மறைவுக்கு பின், ஹிந்துஜா குழுமத்தின் தலைமைப் பொறுப்பை இவர் ஏற்றார். இக்குழுமத்துக்கு, 40க்கும் மேற்பட்ட நாடுகளில் வணிகம் உள்ளது. ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனில் வசித்து வந்த கோபிசந்த், அங்குள்ள மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று காலமானார். இவருக்கு, மனைவி, இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.
கோபிசந்த் ஹிந்துஜா மற்றும் அவரது சகோதரர்கள் ஸ்ரீசந்த், பிரகாஷ் ஹிந்துஜா ஆகியோர், ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த துப்பாக்கி தயாரிப்பு நிறுவனமான, 'ஏ.பி.போபர்ஸ்' இந்திய ஒப்பந்தத்தை பெற உதவ, சட்ட விரோதமாக 64 கோடி ரூபாய் கமிஷனாக பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்டது.
எனினும் இந்த வழக்கில், 2005ல் டில்லி உயர் நீதிமன்றத்தால் மூவரும் விடுவிக்கப்பட்டனர். ஹிந்துஜா குடும்பம், 4 லட்சம் கோடி ரூபாய் நிகர மதிப்புடன், பிரிட்டனின் பணக்காரர்கள் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

