பொது நிகழ்ச்சியில் பங்கேற்றார் நேபாள முன்னாள் பிரதமர்
பொது நிகழ்ச்சியில் பங்கேற்றார் நேபாள முன்னாள் பிரதமர்
ADDED : செப் 28, 2025 03:26 AM

காத்மாண்டு:நேபாளத்தில் நிகழ்ந்த வன்முறை, அரசியல் மாற்றங்களுக்கு பின், அந்நாட்டின் முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலி, முதல்முறையாக கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார்.
நம் அண்டை நாடான நேபாளத்தில், முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலி தலைமையிலான அரசு, நாட்டில் சமூக வலைத்தளங்களை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுத்தது.
இதைக் கண்டித்தும், ஆளும் தலைவர்களின் ஊழலையும் கண்டித்தும் 'ஜென் இசட்' எனப்படும் இளம் தலைமுறையினர் போராட்டத்தில் குதித்தனர். இது வன்முறையாக மாறியது. இதையடுத்து பிரதமர் பதவியை சர்மா ஒலி ராஜினாமா செய்தார். தற்போது அங்கு இடைக்கால அரசு அமைந்துள்ளது.
வன்முறையின்போது நேபாள ராணுவத்திடம் தஞ்சம் புகுந்து பின்னர் தற்காலிக இல்லத்திற்குச் சென்றார் கே.பி.சர்மா ஒலி. அதன்பிறகு அவர் பொதுமக்கள் முன் தோன்றவில்லை.
தற்போது மூன்று வாரங்களுக்குப் பிறகு நேபாள கம்யூனிஸ்ட் - ஒருங்கிணைந்த மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் மாணவர் பிரிவான ராஷ்ட்ரிய யுவ சங்கத்தால் பக்தபூரில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் நேற்று அவர் பங்கேற்றார்.
சர்மா ஒலி, இளம் தலைமுறையினருக்கு எதிராக செயல்பட்டதே நாட்டில் வன்முறை வெடிக்க காரணம் என அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இந்த நிலையில், மாணவர் பிரிவு ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் பங்கேற்று இளம் உறுப்பினர்களை மீண்டும் ஒன்றிணைக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளதாக கட்சியினர் தெரிவித்தனர்.

