ADDED : நவ 27, 2025 02:25 AM
டாக்கா: வங்கதேசத்தில் கடந்த ஆண்டு வெடித்த மாணவர் போராட்டத்தால், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு கவிழ்ந்தது. அவர் நம் நாட்டில் தஞ்சமடைந்தார். முகமது யூனுஸ் தலைமையில் அமைந்த இடைக்கால அரசு, பாகிஸ்தான் உடனான நட்புறவை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக இரு நாடுகளுக்கும் இடையே நேரடி விமான சேவை கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. சமீபத்தில், இரண்டு பாக்., தனியார் விமான நிறுவனங்களான 'பிளை ஜின்னா' மற்றும் 'ஏர்சியால்' நேரடி விமானங்களை இயக்க ஒப்புதல் பெற்றன.
இந்நிலையில், அடுத்த மாதம் முதல் ஈரானைச் சேர்ந்த 'மஹான் ஏர்' நிறுவனம், பாக்., - வங்கதேசம் இடையே நேரடி விமானங்களை இயக்க இருக்கிறது. அதன்படி டாக்கா -- கராச்சி இடையே வாரத்தில் மூன்று விமானங்கள் இயக்கப்படும் என பாகிஸ்தானில் உள்ள வங்கதேச துாதர் இக்பால் ஹுசைன் கான் தெரிவித்துள்ளார்.
மேலும், பயணத்தை அதிகரிக்க விசா நடைமுறைகளும் எளிதாக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். லாகூர் வர்த்தக சபை மற்றும் வங்கதேச துணைத் துாதரகத்தின் கூட்டு பரிந்துரையின்படி 3 அல்லது 4 நாட்களுக்குள் விசா கிடைக்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என, இக்பால் ஹுசைன் கூறினார்.

