துப்பாக்கியால் சுடப்பட்டு 2 மாதம் சிகிச்சை: மரணத்தை தழுவிய கொலம்பிய அதிபர் வேட்பாளர்!
துப்பாக்கியால் சுடப்பட்டு 2 மாதம் சிகிச்சை: மரணத்தை தழுவிய கொலம்பிய அதிபர் வேட்பாளர்!
ADDED : ஆக 11, 2025 06:44 PM

பொகாட்டோ: துப்பாக்கிச்சூட்டில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த கொலம்பியா அதிபர் தேர்தல் வேட்பாளர் மிகுய்ல் உரிபே உயிரிழந்தார். அவருக்கு வயது 39.
இது பற்றிய விவரம் வருமாறு;
தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் 2026ம் ஆண்டு அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் வலதுசாரி ஜனநாயக மைய கட்சியின் முக்கிய உறுப்பினரும், அதிபர் தேர்தல் வேட்பாளருமான மிகுய்ல் உரிபே போட்டியிடுகிறார். 39 வயதான அவர், கடந்த ஜூன் 7ம் தேதி, கொலம்பியாவின் போன்டிபான் மாவட்டத்தில் உள்ள மொடேலியா என்ற பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்தார்.
அப்போது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர், பின்னால் இருந்து துப்பாக்கியால் சுட்டதில் படுகாயம் அடைந்தார். அவரின் முதுகு பகுதியில் பலத்த காயங்கள் இருந்தன. இதையடுத்து, அவர் உடனடியாக தலைநகர் பொகாட்டாவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டாலும், இந்த சம்பவத்தின் பின்னணி குறித்து அந்நாட்டு போலீசார் தீவிர விசாரணையில் இருந்தனர்.
இந்நிலையில், இரண்டு மாதங்களுக்கு பிறகு, சிகிச்சை பலனின்றி மிகுய்ல் உரிபே இன்று (ஆக.11) உயிரிழந்தார். அவரின் மரணத்தை மனைவி மரியா கிளாடியா தராஜோனா எக்ஸ் வலைதள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
நீங்கள் இல்லாமல் வாழ்க்கையின் எஞ்சிய நாட்களை கழிக்க இறைவன் எனக்கு வழிகாட்ட வேண்டும் என்றும் உருக்கமாக அந்த பதிவில் அவர் கூறி உள்ளார்.