வங்கதேசத்தில் கும்பல் தாக்கி மேலும் ஒரு ஹிந்து படுகொலை
வங்கதேசத்தில் கும்பல் தாக்கி மேலும் ஒரு ஹிந்து படுகொலை
UPDATED : டிச 25, 2025 07:29 PM
ADDED : டிச 25, 2025 07:19 PM

டாக்கா: வங்கதேசத்தில் ஹிந்து மதத்தை சேர்ந்த மற்றொருவரை, கும்பல் அடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
முகமது யூனுஸ் ஆட்சிக்கு வந்ததில் இருந்து வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதல், ஹிந்துக்களின் தொழில்களை குறிவைப்பது உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்துள்ளன. சமீபத்தில் ஹிந்து இளைஞர் திபு சந்திர தாஸ், 27, முஸ்லிம் மதத்துக்கு எதிராக பிரசாரம் செய்தார் என வதந்தி பரப்பப்பட்டது. இதை நம்பி ஒரு கும்பல் அவரை கொடூரமாக கொலை செய்தது.
வங்கதேசத்தில், அடுத்தாண்டு பிப்., 12ல் பார்லிமென்ட் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்தே அந்நாட்டில் தொடர்ந்து வன்முறைகள் அரங்கேறி வருகின்றன.
'இன்குலாப் மஞ்ச்' என்ற மாணவர் அமைப்பின் செய்தி தொடர்பாளர் ஷெரீப் ஓஸ்மான் ஹாதி, கடந்த வாரம் நடந்த துப்பாக்கி சூட்டில் உயிர்இழந்தார். இதையடுத்து, அந்நாட்டில் பெரும் வன்முறை வெடித்தது.மேலும், ஹிந்து இளைஞரான தீபு சந்திர தாஸ் என்பவர் கொடூரமாக தாக்கப்பட்டு கொல்லப்பட்டார்.
இந்த சம்பவத்திற்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்து, ஹிந்துக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தது.
வங்கதேசத்தின் சிட்டகாங்கில் உள்ள வெளிநாடுவாழ் ஹிந்துக்களான ஜெயந்தி சங்கா மற்றும் பாபு ஷுகுஷில் ஆகியோரது வீடுகளை மர்ம நபர்கள், நேற்று முன்தினம் தீ வைத்து கொளுத்தினர். இது ஹிந்துக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் நேற்று இரவு (டிசம்பர் 24) நள்ளிரவில் வங்கதேசத்தின் ராஜ்பரி மாவட்டத்தில் மற்றொரு ஹிந்து மதத்தை சேர்ந்தவரை கும்பல் ஒன்று அடித்து கொன்றதாக தற்போது அந்நாட்டு போலீசார் தெரிவித்துள்ளனர்.
போலீசார் கூறியதாவது:
ராஜ்பாரி மாவட்டத்தின் பாங்ஷா உபசிலாவில் உள்ள ஹொசைந்தங்கா சந்தையில் இந்தத் தாக்குதல் நடந்தது. தாக்குதலில் கொல்லப்பட்டவர் அம்ரித் மண்டல் 29, என தெரியவந்துள்ளது.
அம்ரித் மண்டல் ஒரு உள்ளூர் குழுவின் தலைவராக இருந்தவர். அவர் பொதுமக்களை மிரட்டி பணம் பறித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டால் ஆத்திரமடைந்த கும்பல் அவரைத் தாக்கியதாக முதற்கட்ட தகவலில் தெரியவந்துள்ளது.
இவ்வாறு போலீசார் கூறினர்.

