ADDED : ஜூலை 25, 2025 01:48 AM
மாஸ்கோ:ரஷ்யாவில், சீன எல்லையை ஒட்டியுள்ள வனப்பகுதியில் பயணியர் விமானம் விழுந்து நொறுங்கியதில், ஐந்து குழந்தைகள் உட்பட, 48 பேர் உயிரிழந்தனர்.
ரஷ்யாவின் சைபீரியா மாகாணத்தைச் சேர்ந்த அங்காரா விமான நிறுவனத்தின் விமானம், சைபீரியாவின் கபரோவ்ஸ்க்கில் இருந்து நேற்று புறப்பட்டது. இதில், 42 பயணியர், ஆறு விமான ஊழியர்கள் இருந்தனர்.
மிகவும் தொலைவில் உள்ள, சீனாவின் எல்லையை ஒட்டியுள்ள ஆமூர் பகுதியில் உள்ள டின்டா நகருக்கு இந்த விமானம் சென்று கொண்டிருந்தது. டின்டா நகரை எட்டுவதற்கு சில நிமிடங்களே இருந்த நிலையில், விமான கட்டுப்பாட்டு அறையுடன் இந்த விமானத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, மாயமான விமானத்தை ரஷ்ய விமானப்படையினர் தேடி வந்தனர். இந்த நிலையில், டின்டா நகருக்கு அருகே உள்ள வனப்பகுதியில் அந்த விமானம் விழுந்து நொறுங்கி எரிந்து கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதில், ஐந்து குழந்தைகள் உட்பட, 42 பயணியர் மற்றும் ஆறு ஊழியர்கள் என, 48 பேரும் உயிரிழந்ததாக, ரஷ்ய அவசரகால அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக, டின்டா விமான நிலையத்தை நெருங்கும் போது, விமானம் இரண்டு முறை தரையிறங்க முயன்றதாகவும் அதன் பிறகு தொடர்பு துண்டிக்கப்பட்டதாகவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விமானம் தரையிறங்கும் போது விமானியின் பிழையே விபத்திற்குக் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்து ரஷ்யாவின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

