3,000 சைபர் குற்றவாளிகள் கம்போடியாவில் கைது: இந்தியா தகவலால் பிடிபட்டனர்
3,000 சைபர் குற்றவாளிகள் கம்போடியாவில் கைது: இந்தியா தகவலால் பிடிபட்டனர்
ADDED : ஜூலை 25, 2025 04:00 AM

புனோம் பென்: இந்தியா விடுத்த எச்சரிக்கையை தொடர்ந்து, கம்போடியாவில் இருந்த 12 நாடுகளைச் சேர்ந்த 3,000க்கும் மேற்பட்ட ஆன்லைன் மோசடி குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தென்கிழக்கு ஆசிய நாடான கம்போடியாவில் வேலை என்று கூறி, அப்பாவி இளைஞர்களை அழைத்து சென்று சைபர் கிரைம் மோசடியில் ஈடுபட வைப்பதாக நம் வெளியுறவு அமைச்சகம், அந்நாட்டு அரசிடம் தெரிவித்திருந்தது; இது தொடர்பான தகவல்களையும் பரிமாறியது.
மொபைல் போனில் அழைத்து, ஆன்லைனில் கைது செய்வதாக மிரட்டுவது உள்ளிட்ட ஆன்லைன் மோசடிகளில் இவர்கள் ஈடுபடுத்தப்பட்டு வந்தனர்.
இது தொடர்பான விசாரணையை தீவிரப்படுத்தும்படி, நம் உள்துறை அமைச்சகம், வெளியுறவு அமைச்சகம் மற்றும் இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையம் இணைந்து தகவல்கள் தெரிவித்தன.
இதையடுத்து, கம்போடியா பிரதமர் ஹன் மானெட்டின், சட்ட அமலாக்க மற்றும் ராணுவ அதிகாரிகளுக்கு கடுமையான உத்தரவுகளை பிறப்பித்தார். சைபர் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறினால், பணிநீக்கம் செய்யப்படுவீர்கள் என எச்சரித்தார்.
இதை தொடர்ந்து, தலைநகர் புனோம் பென் உட்பட 17 மாகாணங்களில், மோசடி கும்பலை குறிவைத்து தீவிர சோதனை நடத்தப்பட்டது. இதில் சீனா, வியட்நாம், இந்தோனேஷியா, இந்தியா என 12 நாடுகளைச் சேர்ந்த 3,075 பேர் ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதில், 606 பெண்களும் அடங்குவர்.
இந்த மோசடி குழுவில் பிரதானமாக செயல்பட்டவர்கள் சீனாவைச் சேர்ந்தவர்கள். இவர்கள், போலி வேலை வாய்ப்புகளை வழங்கி, பின்னர் சிறைபிடித்து வைத்து, ஆன்லைன் மோசடிகளை செய்ய கட்டாயப்படுத்தியது கண்டு பிடிக்கப்பட்டது.
வேலை தேடி கம்போடியா நாட்டுக்கு செல்வோரை, முதலீட்டு மோசடிகள், ஆண்களை ஏமாற்றி பணம் பறிக்க வைப்பது, போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபடுத்திஉள்ளனர்.
கைதானவர்களிடமிருந்து, நுாற்றுக்கணக்கான டிஜிட்டல் சாதனங்கள், ஆயுதங்கள், போதைப் பொருட்களை கம்போடியா போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இதில், 105 இந்தியர்களும் உள்ளதால், அவர்களை அழைத்து வருவதற்கான முயற்சியில் வெளியுறவு அமைச்சகம் இறங்கியுள்ளது.