ஜப்பானில் பனிபடர்ந்த சாலையில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து; 20 வாகனங்கள் எரிந்து நாசம்
ஜப்பானில் பனிபடர்ந்த சாலையில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து; 20 வாகனங்கள் எரிந்து நாசம்
ADDED : டிச 27, 2025 10:30 PM

டோக்கியோ: ஜப்பானில் பனி படர்ந்த சாலையில் சென்ற 60க்கும் மேற்பட்ட வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இதனால், ஏற்பட்ட தீவிபத்தில் 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிந்து நாசமாகின.
இது குறித்து போலீசார் கூறியதாவது; டோக்கியோவில் இருந்து சுமார் 160 கிலோ மீட்டர் தொலைவில் குன்மா மாகாணத்தில் உள்ள கான் எட்சு நெடுஞ்சாலையில் தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. புத்தாண்டு விடுமுறையைக் கொண்டாடுவதற்காக பொதுமக்கள் கார்களில் அணிவகுந்து சென்றுள்ளனர். நேற்றிரவு கடுமையான பனிப்பொழிவு காரணமாக சாலைகளில் பனி படர்ந்து காணப்பட்டுள்ளது.
இதனால், மினகாமி நகரில் இரு லாரிகள் மோதி விபத்துக்குள்ளாகின. அதன்பிறகு, பனி காரணமாக பிரேக் செயலிழந்து, ஒன்றன் பின் ஒன்றாக சுமார் 60க்கும் மேற்பட்ட வாகனங்கள் மோதியுள்ளன. இதில், 20 கார்கள் தீயில் எரிந்து நாசமாகின. 7 மணிநேரம் போராட்டத்திற்கு பிறகு தீயணைக்கப்பட்டது. இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து காரணமாக, கான்-எட்சு நெடுஞ்சாலையில் இன்று போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது.

