மீண்டும் சீண்டிப் பார்க்கும் அமெரிக்கா மத்திய அரசின் எச்சரிக்கையால் 'டென்ஷன்'
மீண்டும் சீண்டிப் பார்க்கும் அமெரிக்கா மத்திய அரசின் எச்சரிக்கையால் 'டென்ஷன்'
ADDED : மார் 29, 2024 12:18 AM
வாஷிங்டன்: டில்லி முதல்வர் கெஜ்ரிவால் கைது விவகாரத்தில் அதிகப் பிரசங்கித்தனமாக கருத்து தெரிவித்த அமெரிக்காவுக்கு, மத்திய அரசு கண்டனம் தெரிவித்ததை அடுத்து, 'அரவிந்த் கெஜ்ரிவால் கைது விவகாரத்தில் நேர்மையான, வெளிப்படையான குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை ஆதரிக்கிறோம்' என, மீண்டும் கருத்து தெரிவித்து அமெரிக்கா சீண்டிப் பார்த்துள்ளது.
மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை, அமலாக்கத் துறையினர் கடந்த 21ல் கைது செய்தனர். இந்த விவகாரத்தை உன்னிப்பாக கவனித்து வருவதாக ஜெர்மனி மற்றும் அமெரிக்கா தெரிவித்தன. ஜெர்மனியின் கருத்துக்கு வெளிப்படையாக கண்டனம் தெரிவித்த மத்திய அரசு, 'உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வேண்டாம்' என கேட்டுக் கொண்டது.
அமெரிக்காவின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில், டில்லியில் உள்ள அமெரிக்க துாதரகத்தின் துணை துாதர் குளோரியா பெர்பெனாவை நேரில் வரவழைத்த நம் வெளியுறவு துறை அமைச்சகம், எதிர்ப்பை பதிவு செய்தது. அரை மணி நேரத்துக்கு மேலான பேச்சின் போது, 'இது இரு நாட்டு உறவுக்கு ஆரோக்கியமானதல்ல' என, இந்தியா தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது.
இந்த சம்பவத்தை அடுத்து, இது குறித்து அமெரிக்க வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் நேற்று விளக்கமளித்துள்ளார்.
அப்போது அவர் கூறியதாவது:
அரவிந்த் கெஜ்ரிவால் கைது நடவடிக்கையை நாங்கள் பின்தொடர்ந்து வருகிறோம். வங்கிக் கணக்குகள் முடக்கம் என்கிற காங்கிரஸ் குற்றச்சாட்டையும் நாங்கள் அறிவோம்.
இந்த இரு பிரச்னைகளுக்கும் வெளிப்படையான, நியாயமான சட்டச் செயல் நடைமுறைகளை இந்திய அரசு உறுதி செய்ய வேண்டும்.
இந்த விவகாரத்தில் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் எடுக்கப்படும் நடவடிக்கைகளை நாங்கள் ஆதரிக்கிறோம். எங்களின் வெளிப்படையான கருத்தை மட்டுமே நாங்கள் கூறியுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

