தலையில் குண்டு, கை விரல் துண்டிப்பு; ஹமாஸ் தலைவர் யாஹ்யா பிரேத பரிசோதனையில் 'திடுக்'
தலையில் குண்டு, கை விரல் துண்டிப்பு; ஹமாஸ் தலைவர் யாஹ்யா பிரேத பரிசோதனையில் 'திடுக்'
ADDED : அக் 19, 2024 08:59 AM

காசா: ஹமாஸ் அமைப்பின் தலைவர் யாஹ்யா சின்வார் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனையில், தலையில் குண்டு பாய்ந்ததும், அவரது கை விரல்கள் துண்டிக்கப்பட்டதும் தெரியவந்தது.
காசாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில், மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களில் ஒருவர் ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார். இதை இஸ்ரேல் அரசு உறுதி செய்தது. யாஹ்யா சின்வார் கடந்த ஆண்டு அக்., 7ல் இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலின் மூளையாகச் செயல்பட்டவர். சின்வார் உயிரிழந்ததை அந்த அமைப்பின் துணைத்தலைவர் கலீல் அல் ஹய்யா உறுதி செய்துள்ளார். அவரது உடல் பிரேத பரிசோதனையில், திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது.
பிரேத பரிசோதனை செய்த டாக்டர்கள் கூறியதாவது: சின்வர் தலையில் துப்பாக்கியால் சுடப்பட்டதால் உயிரிழந்தார். அவரது தலையில் குண்டுகள் இருந்தன. இதனால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இருந்தது. இஸ்ரேல் ராணுவத்தினர் அவரது இடது கை விரல்களை துண்டித்துள்ளனர். ஒரு விரல் மட்டும் காணவில்லை. குறிப்பாக, இடது கையின் ஆள்காட்டி விரல் நன்கு துண்டிக்கப்பட்டு இருந்தது என்றனர்.
இது குறித்து, இஸ்ரேல் தேசிய தடயவியல் மருத்துவ மையத்தின் தலைமை நோயியல் நிபுணரான சென் குகெல் கூறியதாவது: சின்வார் இஸ்ரேல் சிறையில் பிணைக்கைதிகளாக இருந்த காலத்தில் கிடைத்த சுயவிவரத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தோம். இறுதியாக அவரது டி.என்.ஏ., மூலம் அவரை அடையாளம் காண முடிந்தது. முதலில் அவரது பற்களால் அடையாளம் காண முயற்சி செய்தோம். ஆனால் போதுமான ஆதாரம் கிடைக்கவில்லை என்றார்.

