இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு அளிக்க வேண்டும்: ஸ்டாலினிடம் உதயநிதி வலியுறுத்தல்
இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு அளிக்க வேண்டும்: ஸ்டாலினிடம் உதயநிதி வலியுறுத்தல்
ADDED : பிப் 03, 2024 12:47 AM

தமிழக வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி: 'வரும் லோக்சபா தேர்தலில், தி.மு.க.,வில் இளைஞர் அணியினருக்கு அதிக வாய்ப்பளிக்க வேண்டும்' என, முதல்வர் ஸ்டாலினிடம் அமைச்சர் உதயநிதி வலியுறுத்தி உள்ளார். இளைஞர்களுக்கு வாய்ப்பளிப்பதில் தவறில்லை; இது, ஆரோக்கியமான விஷயம்.
டவுட் தனபாலு: இன்று லோக்சபா தேர்தலில் நடப்பது, நாளைக்கு சட்டசபை தேர்தலுக்கும் தொடருமே... அப்ப, எம்.ஜி.ஆர்., காலத்து மூத்த அரசியல்வாதியான உங்களுக்கும் வாய்ப்பு கிடைப்பது, 'டவுட்' தான்!
பத்திரிகை செய்தி: சென்னையில் நடந்த பா.ம.க., சிறப்பு பொதுக்குழுவில் பேசிய ராமதாஸ், அன்புமணி, ஜி.கே.மணி உள்ளிட்டோர், அ.தி.மு.க., - பா.ஜ., மீதான விமர்சனங்களைத் தவிர்த்தனர். தி.மு.க., அரசுக்கு எதிராக மட்டும் தீர்மானம் நிறைவேற்றினர்.
டவுட் தனபாலு: இதில் இருந்தே, தி.மு.க., கூட்டணியில் பா.ம.க.,வுக்கு கதவை அடைச்சுட்டாங்க என்பது, 'டவுட்'டே இல்லாம தெரியுது... அதே நேரம், அ.தி.மு.க., - பா.ஜ.,ன்னு ரெண்டு பக்கமும் பா.ம.க., 'துண்டு' போட்டு வச்சிருப்பதும் பளிச்னு தெரியுது!
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்: நரேந்திர மோடி மீண்டும் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்று, நாட்டிற்கு சுபிட்சம் வரக்கூடிய முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்வார். நாங்கள் பா.ஜ., கூட்டணியில் தான் இருக்கிறோம்; அதிலிருந்து வெளியே வரவில்லை.
டவுட் தனபாலு: நீங்க தான் இப்படி சொல்லிக்குறீங்க... ஆனா, பா.ஜ., தரப்புல இருந்து யாரும், 'பன்னீர்செல்வம் எங்க அணியில தான் இருக்கார்'னு வாய் தவறி கூட சொல்ல மாட்டேங்கிறாங்களே... அழையா விருந்தாளியா, அவங்க வீட்டு வாசல்ல நின்னுட்டு இருக்கீங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!

