டவுட் தனபாலு: ‛மகளிர் உதவி தொகை, சாலை குறைபாடுகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை'
டவுட் தனபாலு: ‛மகளிர் உதவி தொகை, சாலை குறைபாடுகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை'
ADDED : பிப் 28, 2024 12:24 AM

தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன்:
தி.மு.க.,வின் திண்ணை பிரசாரம், மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. மக்களை நேரடியாக சந்தித்து, மாநில அரசு அறிவித்த திட்டங்கள் வந்து சேர்ந்ததா, இல்லையா என்பது குறித்து அறிந்து, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மகளிர் உதவி தொகை, சாலை குறித்த குறைபாடுகள், மக்களிடம் குறைகளாக சொல்லப்படுகின்றன அவற்றை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
டவுட் தனபாலு:
மகளிர் உரிமை தொகை, சாலை குறைபாடுகளை, லோக்சபா தேர்தலுக்குள்ள எப்படி நிவர்த்தி செய்து, எப்படி அவங்க ஓட்டுகளை அறுவடை பண்ண போறீங்க என்ற, 'டவுட்' எழுதே!
---
த.மா.கா., இளைஞரணி தலைவர் யுவராஜா:
கடந்த, 2019 முதல், அ.தி.மு.க., கூட்டணியில் த.மா.கா., இணைந்து, தமிழக மக்களின் நலனுக்காக குரல் கொடுத்தோம். அதற்கும் மேலாக நல்ல நட்போடு, அரசியல் பணியாற்றி வந்தோம். பா.ஜ.,வுடன் கூட்டணி என, வாசன் அறிவித்துள்ளார். காமராஜர், மூப்பனார் வழியில் அரசியல் பயின்றவன் என்ற காரணத்தால், தனிப்பட்ட முறையில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை சந்தித்து நன்றி தெரிவித்தேன்.
டவுட் தனபாலு:
புதிய கூட்டணிக்கு போனதும், பழைய கூட்டணி பத்தி, வசைமாரி பொழிவது தான் நம்ம ஊர் அரசியல்வாதிகளின் வழக்கம்... ஆனா, கூட்டணியில இருந்து வெளியேறும் போது, நன்றி சொல்லிட்டு போற உங்களை, 'டவுட்'டே இல்லாம பாராட்டலாம்!
---
திருப்பூர் தொகுதி இந்திய கம்யூ., - எம்.பி., சுப்பராயன்:
தி.மு.க.,வுடன் இரண்டாம் கட்ட பேச்சு, மிக மிக சுமுகமாக நடந்தது. மார்ச் 3ம் தேதிக்கு பின், இறுதி கட்ட ஒப்பந்தம் நிறைவேற உள்ளது. கடந்த லோக்சபா தேர்தலில் ஒதுக்கப்பட்ட திருப்பூர், நாகப்பட்டினம் தொகுதிகளுடன், கூடுதலாக தென்காசி தொகுதியும் கேட்டு உள்ளோம்.
டவுட் தனபாலு:
எல்லாரும் கடந்த முறை போட்டியிட்ட தொகுதிகளை விட, கூடுதலா போட்டியிட நினைக்குறீங்களே... இதே மாதிரி, ஆளுங்கட்சியான தி.மு.க.,வும் நினைச்சுட்டா, இப்ப இருக்கிற இரண்டு தொகுதியும் திரும்ப கிடைக்குமா என்பது, 'டவுட்'தான்!

