ADDED : பிப் 14, 2024 02:28 AM
சென்னை:''காட்டுப்பன்றிகள் எண்ணிக்கையை கட்டுப்படுத்த, கேரளாவில் சுட அனுமதி அளித்தது குறித்து ஆய்வு செய்ய, கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது,'' என, வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்தார்.
சட்டசபையில் கேள்வி நேரத்தில், அ.தி.மு.க., - அருண்குமார் எழுப்பிய கேள்விக்கு, அமைச்சர் அளித்த பதில்:
மனித - விலங்கு மோதல்களை தடுக்க, மூன்று ரோந்து குழுக்கள், யானைகளை தடுக்க அகழிகள் அமைக்கப்பட்டு உள்ளன. ரோந்து குழுக்கள், வன விலங்கு கண்காணிப்பில் ஈடுபடுகின்றன.
போலீசார், மின் வாரியத்தினர், வனத்துறை அலுவலர்கள் குழு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வன விலங்கு நடமாட்டம் குறித்து, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. 'வாட்ஸாப்' குழுக்கள் அமைக்கப்பட்டு, யானைகள் நடமாட்டம் பற்றிய தகவல் பரிமாறப்படுகிறது.
விலங்குகளால் உயிரிழப்பு ஏற்பட்டால், கடந்த ஆட்சியில், நான்கு லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. தற்போது 10 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
கேரளாவில் காட்டு பன்றிகளை சுட, சில நிபந்தனைகளுடன் அனுமதிப்பது குறித்து ஆய்வு செய்து, அரசுக்கு அறிக்கை அளிக்க கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. அறிக்கை அளித்ததும் அதன்படி அரசு நடவடிக்கை எடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

